காற்று மாசடைவதால் உலகில் ஆண்டுதோறும் 55 இலட்சம் பேர் மரணமடைவதாக உலக வங்கியின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக வங்கியும், சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீடுகளுக்கான நிறுவனமும் இணைந்து மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
குறித்த அறிக்கையில், உலகளவில் 4ஆவது அபாயகரமான காரணியாக “காற்று மாசு” திகழ்கிறது.
உலகில் 85 சதவீதம் பேர் சுகாதாரமற்ற காற்றை சுவாசிக்கின்றனர். புகைப்பிடிப்பதால் ஏற்படும் மரணங்களைப் போல பத்து சதவீத இறப்புகளுக்கு காற்றுமாசு காரணமாக உள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றுமாசு காரணமாக சர்வதேச அளவில் 200 பில்லியன் டொலர் பொருளாதார விரயம் ஏற்பட்டுள்ளது.
சீனாவே இதனால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. காற்று மாசு காரணமாக சீனாவில் 17 லட்சம் பேர் இறந்துள்ளனர். 60 சதவீதம் உயிரிழப்பு இந்தியா மற்றும் சீனாவில் நிகழ்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவின் மொத்த தேசிய வருமானத்தில் பத்தில் ஒரு பகுதி காற்று மாசுபடுவதால் ஏற்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும், நலத்திட்டங்களுக்காவும் செலவாகின்றது.
கடந்த 2013ஆம் ஆண்டு முதல் எடுக்கப்பட்ட புள்ளி விபரங்களின் அடிப்படையில் உலக வங்கி இந்த அறிக்கையை தயாரித்துள்ளது.
மேலும், காற்று மாசடையும் சூழ்நிலையில் வாழும் மக்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஜேர்மனியின் மருத்துவ பேராசிரியர் அன்னெட்டே பீட்டர்ஸ் தலைமையிலான மருத்துவர் குழு ஒன்று சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
இந்த ஆய்வில் வாகனப்புகை மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை போன்றவற்றால் காற்று மாசடையக் கூடிய பகுதிகளில் வசிக்கும் 3000 பேரின் உடலில் குளுக்கோஸ் அளவின் மாற்றம் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டது.
காற்று மாசடையும் காரணத்தால் சுவாசக் கோளாறு மற்றும் இதய நோயால் மட்டுமின்றி நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகமாக கூடும் என்று ஜேர்மன் பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.
-http://www.tamilwin.com