நாட்டில் நிகழும் குற்றங்களுக்கு தண்டனை அளிக்க கடவுள் இல்லாத காரணத்தினால் தான் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நான் அளிக்கிறேன் என பிலிப்பைன்ஸ் நாட்டு ஜனாதிபதி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டு தலைநகரான மணிலாவில் ஜனாதிபதியான Rodrigo Duterte நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது, ‘பிலிப்பைன்ஸ் நாட்டில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பதை பல்வேறு நாடுகள் எதிர்த்து வருகின்றன.
ஆனால், உலக நாடுகள் ஒன்றை நன்றாக புரிந்துக்கொள்ள வேண்டும். உலகளவில் தற்போது கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்கிறது.
கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் சட்டத்தின் மீதும் நம்பிக்கை வைக்க மாட்டார்கள். இவ்வாறு சட்டத்தின் மீதான நம்பிக்கை குறையும்போது, குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
குற்றங்கள் அதிகரித்தால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் என்ற வார்த்தையே இல்லாமல் போய்விடும்.
குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்க கூடாது என கத்தோலிக்க தேவாலயம் கூறுகிறது. நான் அவர்களை பார்த்து ஒரு கேள்வி எழுப்புகிறேன்.
‘ஒருவேளை கடவுள் இவ்வுலகில் இல்லை என்றால் என்ன நிகழும்? குற்றவாளிகளை யார் தண்டிப்பது?
இளம்பெண்களையும், சிறுமிகளையும் கடத்தி கற்பழித்து கொலை செய்கிறார்களே? போதை பொருளுக்கு அடிமையாக பலர் குடும்பங்களை இழக்கிறார்களே? இதனை கடவுள் ஏன் தடுக்கவில்லை?
சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் உடலுறவு கொள்ள மறுக்கும் அப்பாவி இளம்பெண்களை உயிருடன் எரித்து கொல்கிறார்களே, இப்போது கடவுள் எங்கே இருக்கிறார்?
இவ்வாறு செய்தியாளர்களிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய ஜனாதிபதி திடீரென மேலே பார்த்து ‘கடவுளே, நீ எங்கே இருக்கிறாய்? உண்மையில் நீ இருக்கிறாயா? இல்லையா?’ எனக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
பின்னர், ‘ஒருவேளை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிப்பதை கடவுள் விரும்பாமல் இருக்கலாம். அதனால் எனக்கு கவலை இல்லை. கடவுள் ஒன்றும் எனக்கு எதிரி அல்ல.
ஒரு நாள் நான் மரணமாகி கடவுளை நேரில் சந்திக்கும்போது சில கேள்விகளை கேட்பேன்.
நீ உண்மையிலேயே மக்களை காக்கும் கடவுள் என்றால், குற்றங்களை ஏன் தடுக்கவில்லை? நீ தடுக்காத காரணத்தினால் தான் நான் குற்றவாளிகளை தண்டிக்கிறேன்’ என கடவுளிடம் நான் விளக்குகிறேன் என ஜனாதிபதி செய்தியாளர்களிடம் பரபரப்பாக பேசியுள்ளார்.
-http://news.lankasri.com