குழந்தைகள் உள்பட 284 நபர்களை கொன்று குவித்த ஐ.எஸ் தீவிரவாதிகள்

libya_isis_attack_002ஈராக் நாட்டில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 284 அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்துள்ளதாக ஐ.நா சபை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

ஈராக் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மோசூலை கடந்த 2014ம் ஆண்டு யூன் மாதம் ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

சுமார் 1.5 மில்லியன் மக்கள் தொகை உள்ள இந்த ஒரு நகரில் மட்டும் சுமார் 8,000 ஐ.எஸ் தீவிரவாதிகள் கண்காணிப்பில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக இந்நகரை மீட்க ஈராக் ராணுவமும், அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினரும் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

இந்த தாக்குதல் தீவிரமடைந்ததை தொடர்ந்து கடந்த புதன்கிழமை அன்று தங்களை பாதுகாத்துக்கொள்ள 550 அப்பாவி பொதுமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்த தீவிரவாதிகள் கடத்தி சென்றுள்ளனர்.

இது தொடர்பாக ஐ.நா சபையை சேர்ந்த Ravina Shamdasani என்பவர் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘தீவிரவாதிகள் கடத்தி சென்றவர்களில் 284 பேரை கொன்று ஒரே இடத்தில் புதைத்துள்ளனர்.

இவர்களில் சிறுவர், சிறுமிகளும் அடங்குவார்கள்’ என்ற அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எஞ்சிய பொதுமக்கள் என்ன ஆனார்கள் என்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-http://news.lankasri.com