விளைநிலத்தில் மாடு மேய்ந்த விவகாரம்… போர்க்களமான வயல்கள்- 18 பேர் படு கொலை!!

farmerஅபுஜா: நைஜீரியா நாட்டில் கால்நடை மேய்ப்பாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே எழுந்த மோதலில் 18 பேர் கொல்லப்பட்டனர். நைஜீரியாவில் உள்ள ஃபுலானி எனும் நாடோடி இனத்தைச் சேர்ந்த மக்கள் ஊர் ஊராக சென்று கால்நடைகளை மேய்த்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நைஜர் மாநிலத்தில் உள்ள பிங்குயி கிராமத்தில் அவர்கள் கால்நடைகளை மேய்க்கச் சென்றனர்.

அப்போது விவசாயி ஒருவரின் நிலத்தில் புகுந்த ஆடு, மாடுகள் அவர் விளைவித்திருந்த பயிர்களை மேய்ந்து நாசப்படுத்தின. இதனால் கடும் கோபமடைந்த நிலத்தின் உரிமையாளர் மேய்ப்பாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டத்தில் மேய்ப்பாளர்கள் ஒன்று திரண்டு விவசாயியை தாக்கினர். மேய்ப்பாளர்களின் தாக்குதலால் ஆத்திரமடைந்த அந்த கிராமத்தை சேர்ந்த சக விவசாயிகள் மேய்ப்பாளர்களின் கூடாரங்களை தீயிட்டு கொளுத்தியதோடு அவர்களையும் சரமாரியாக தாக்கினர். இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட இந்த மோதலால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது. இதில் இருதரப்பையும் சேர்ந்த பெண்கள் குழந்தைகள் உட்பட 18 பேர் கொல்லப்பட்டனர். 43 பேர் படுகாயமடைந்தனர். இந்த மோதலையடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற மோதலில் 10 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

tamil.oneindia.com