அமெரிக்காவில் புதிய திருப்பம்: மூன்று மாநிலங்களில் மறுவாக்கு எண்ணிக்கை.. சிக்கலில் ட்ரம்ப்?

donald_9_001அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டு, அவரும் புதிய அமைச்சரவை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் விஸ்கான்ஸின் மாநிலத்தில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. மிஷிகன் மற்றும் பென்சில்வேனியா மா நிலங்களிலும் மறுவாக்கு எண்ணிக்கைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலரி க்ளிண்டன் போட்டியிட்டனர்.

அவர்களைத் தவிர சிறிய கட்சிகளான லிபெர்டேரியன் கட்சி சார்பில் கேரி ஜான்சன் மற்றும் க்ரீன் கட்சி சார்பில் ஜில் ஸ்டேன் போட்டியிட்டனர்.

இவர்கள் இருவரும் கணிசமான வாக்குகளைப் பிரிக்கவும் செய்தனர்.

தற்போது க்ரீன் கட்சி வேட்பாளர் ஜில் ஸ்டேன் விஸ்கான்ஸின், மிஷிகன் மற்றும் பென்சில்வேனியா மாநிலங்களில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று மனு கொடுத்துள்ளார்.

விஸ்கான்ஸின் மாநில தேர்தல் ஆணையம் அவரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டுள்ளது.

மிஷிகன் மற்றும் பென்சில்வேனியா மாநிலங்களும் விரைவில் மறு வாக்கு எண்ணிக்கை குறித்து அறிவிக்க உள்ளனர்.

ஹிலாரியின் தோல்விக்கு காரணமான மூன்று மாநிலங்கள்

ஐம்பது மாநிலங்களில் எதற்காக இந்த மூன்று மாநிலங்களில் மட்டும் மறு வாக்கு எண்ணிக்கைக்கு கோரிக்கை என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த மாநிலங்களில் ஹிலாரி நிச்சயம் வெற்றி பெறுவார் என நம்பப்பட்டது. இவை ஜனநாயகக் கட்சி அதிக ஆதரவாளர்களைக் கொண்ட மாநிலங்களாகும்.

விஸ்கான்ஸின், மிஷிகன் மாநிலங்களில் பத்தாயிரத்திற்கும் சற்று அதிகமான வாக்கு வித்தியாசத்தில் ஹிலாரி தோல்வியுற்றுள்ளார்.

பென்சில்வேனியாவில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசம் உள்ளது.

இந்த மூன்று மா நிலங்கள் வெற்றியையும் சேர்த்து ட்ரம்புக்கும் 306 அதிபர் வாக்குகள் கிடைத்துள்ளன.

மறு எண்ணிக்கையில் விஸ்கான்ஸின் (10), மிஷிகன் (16), பென்சில்வேனியா (20) என மூன்று மாநிலங்களும் ட்ரம்ப் தோல்வியுற்றால், அவருடைய அதிபர் வாக்குகள் 260 ஆகக் குறையும் (306- 46 (20 16 10), ஹிலாரி வெற்றி பெற்று விடுவார்.

நாடு தழுவிய பொது வாக்கு எண்ணிக்கையில் 1 மில்லியனுக்கும் அதிகமாக பெற்று ஹிலாரி முன்னிலையில் இருக்கிறார்.

ஆகையால் அவருடைய ஆதரவாளார்களும் மறு எண்ணிக்கை வேண்டும் என்று கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

மறுவாக்கு எண்ணிக்கையில் விஸ்கான்ஸின், பென்சில்வேனியாவில் ஹிலாரி வெற்றி பெற்றாலும் 60 ஆயிரத்திற்கும் மேலான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்ற பென்சில்வேனியாவில் வெற்றி பெறுவது கடினமான ஒன்றாகும்.

மிகப்பெரிய தவறு நடந்திருந்தால் ஒழிய அங்கு ஹிலாரியின் வெற்றி சாத்தியமில்லை.

எனவே அதிபராக பொறுப்பு ஏற்பதில் டொனால்ட் ட்ரம்புக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

-http://www.tamilwin.com