நான்கு இளம் பிள்ளைகளை போலீஸ் “கைது செய்து அடித்தது”

மலாய் இளைஞர் கும்பல் ஒன்றினால் தாக்கப்பட்டதாக கூறப்படுவதின் தொடர்பில் ஸ்தாபாக் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யச் சென்ற  14 வயதான நான்கு இந்திய இளம் பிள்ளைகள் கைது செய்யப்பட்டு அடிக்கப்பட்டதுடன் குற்றங்களை ஒப்புக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர்.

தாக்குதலுக்கு இலக்கான அந்த நால்வருக்கு உதவி செய்யச் சென்ற அவர்களுடைய 21 வயது நண்பரையும் அந்தக் கும்பல்  மோசமாக தாக்கியது. அந்தக்  கும்பல் பாராங் கத்திகளையும் இரும்புக் கம்பிகளையும்  வைத்திருந்ததாக கூறப்பட்டது. அவர் தற்போது கோலாலம்பூர் மருத்துவமனையில் உள்ள தீவிரக் கண்காணிப்புப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மனித உரிமைக் கட்சியின் கல்விப் பிரிவுத் தலைவர் ஜி கணேசன் ஏற்பாடு செய்த நிருபர்கள் சந்திப்பு ஒன்றில் அந்த நான்கு இளம் பிள்ளைகளுடைய பெற்றோர்களும் பாதுகாவலர்களும் இன்று அந்த விவரங்களைத் தெரிவித்தனர்.

போலீசார் தங்கள் பிள்ளைகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.

நேற்று மாலை கம்போங் பாரு ஆயர் பானாஸில் தனது அடுக்கு மாடி வீட்டுக்கு 14 வயதான இந்திரன் சென்று கொண்டிருந்த போது 10 மலாய் இளைஞர்கள் அவரை நிறுத்தி அந்த அடுக்குமாடித் தொகுதியின் மேல் தளத்தில் இருந்து தங்களை நோக்கி ஒரு பொருளை எறிந்ததாக குற்றம் சாட்டி,  வயிற்றில் குத்தியதாக அந்தக் குடும்பத்தினருடைய வழக்குரைஞர் என்ற முறையில் கணேசன் கூறினார்.

“அவர் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அவர் எப்படி மேல் தளத்திலிருந்து பொருளைத் தூக்கி எறிந்திருக்க முடியும்? அதில் எந்த நியாயமும் இல்லை”, என்றார் கணேசன்.

இந்திரனுக்கு உதவி செய்ய வந்த அவருடைய மூன்று நண்பர்களான ரவிந்திரன், அர்வின் ராஜ், சக்திவேல் (ஒரே வயதுடையவர்கள்) ஆகியோரையுன் அந்தக் கும்பல் தாக்கியது என கணேசன் சொன்னார்.

“அந்த நால்வரும் உதவி கோரி இன்னொரு அடுக்குமாடித் தொகுதியில் இருந்த சரவணன் வீட்டுக்குச் சென்றனர்.”

பாராங்கத்திகளினாலும் இரும்புக் கம்பிகளினாலும் தாக்கப்பட்டனர்

“21 வயதான சரவணன் அந்தக் கும்பலை எதிர்கொண்ட போது அவர் பாராங்கத்தியால் தாக்கப்பட்டதுடன்  தலையிலும் இரும்புக் கம்பியால் அடிக்கப்பட்டார்.”

“தாங்கள் தாக்கப்பட்டதாக போலீஸ் புகார் செய்வதற்காக இந்திரன், ரவிந்திரன், அர்வின் ராஜ், சக்திவேல் ஆகியோர் ஸ்தாபாக் போலீஸ் நிலையத்துக்குச் சென்ற போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.”

போலீஸ் சிறையில் அவர்கள் அடிக்கப்பட்டதுடன் கிரிமினல் குற்றங்களை ஒப்புக்கொள்ளுமாறும் அவர்களுக்குக் கூறப்பட்டது… அவர்கள் புகார் கூற வந்த கும்பலைச் சேர்ந்த 10 மலாய்க்காரர்களைப் போலீஸ் கைது செய்யவில்லை”, என கணேசன் தெரிவித்தார்.

எரிந்த புண்ணில் எண்ணெய் ஊற்றுவது போல அந்த நால்வரையும் ஏழு நாட்களுக்குத் தடுத்து வைப்பதற்கான  ஆணையையும் போலீசார் பெற்றுள்ளதாகவும் கோலாலம்பூர் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சைக்காக காத்திருக்கும் சரவணனை கைது செய்யவும் போலீஸ் திட்டமிடுவதாகவும் கணேசன் கூறினார்.

அந்த விவகாரத்தைக் கையாளுவதில் “இனப் பாகுபாடு” காட்டுவதாக போலீஸுக்கு எதிராக பெற்றோர்களும் பாதுகாவலர்களும் 18 போலீஸ் புகார்களை சமர்பித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட அந்தக் கும்பலுக்கு எதிராகவும் ஸ்தாபாக் போலீஸுக்கு எதிராகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மனித உரிமைக் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் எஸ் ஜெயதாஸ், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கும் உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேனுக்கும் தேசியப் போலீஸ் படைத்தலைவர் இஸ்மாயில் ஒமாருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

TAGS: