மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கும் அவரின் அமைச்சரவை சகாக்களும் கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் சட்டமன்ற தொகுதியில் இவ்வாண்டு தீபாவளியை கொண்டாட வருவதை வருக வருக என்று வரவேற்கிறேன் என்று கூறுகிறார் அச்சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான சேவியர் ஜெயக்குமார்.
“கடந்த 42 மாதங்களாக என்னுடன் இணைந்து இத்தொகுதி மக்களின் மேம்பாட்டுக்கு உழைத்துவரும் பக்காத்தான் தொண்டர்கள் மற்றும் பல சமூக, அரசியல் இயக்கங்களின் அர்ப்பணிப்புக்கு பிரதமரிடமிருந்து கிடைத்த அங்கீகாரமாக இதை நாம் கருதவேண்டும்.
“மறைந்தும் மறையாத தமிழ் அறிஞர் அண்ணா கூறிய ‘மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்’ என்ற கருத்துக்கு ஒப்ப எதிர்க்கட்சித் தொகுதியில் இதுபோன்ற பொது உபசரிப்புகளை பிரதமரே முன்வந்து நடத்துவது பாராட்டத்தக்கது”, என்றாரவர்.
கடந்த 2008 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு பின்னர் பொது உபசரிப்புகளுக்கு தலைவர்களைத் தேடி மக்கள் செல்லும் நிலையை மாற்றி மக்களைத்தேடி தலைவர்கள் வரும் பாணியை பக்காத்தான் தொடங்கியது. அதன்படி இந்திய மக்கள் அதிகம் வாழும்கிள்ளான் பண்டமாரானில் தொடங்கி, பெட்டாலிங் ஜெயா, பத்துமலை ஆகிய இடங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஓர் இடத்திலும் இவ்வாண்டு சிமிஞ்சி மற்றும் ரவாங் ஆகிய இரு இடங்களில் சிலாங்கூர் மாநில அரசு திறந்த இல்ல உபசரிப்புகளை நடத்தியது. நமது பாணியில், பாரிசானும் இறங்கியிருப்பது மக்களுக்கு கிடைத்துள்ள முதல் வெற்றியாகும் என்று அவர் கூறினார்.
“இப்போதுதான் இந்நாட்டு இந்திய மக்கள் ஜனநாயக கரும்பின் நுனிப்பகுதியை சுவைக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் ஜனநாயக கரும்பின் அடிப்பகுதியில்தான் சுவை மிகுந்துள்ளது. அதை முழுமையாக இச்சமூகத்திற்கு அளிக்க வேண்டும் என்பதுதான் எங்களின் தலையாய கோட்பாடாகும். அதன் பலன் அனைவருக்கும் கிடைக்கும் வரையில், இந்நாட்டு ஜனநாய அம்சங்கள் மேலும் வலுப்பெற நாம் தொடர்ந்து ஒன்றுப்பட்டு பாடுபட வருக வருக என்று அனைத்து வாக்காளர்களையும் அழைக்கிறேன்”, என்று அவர் அழைப்பு விடுத்தார்.
“இத்தொகுதிக்கு வருகை அளிக்கும் பிரதமர் நஜிப் இந்தியர்களின் வாய்களுக்கு மட்டும் தீபாவளி இனிப்பு வழங்குவதாக இல்லாமல், இந்தியர்களின் வாழ்வுக்கே இனிப்பு வழங்குவதாக இருக்க வேண்டும்”, என்பதே நமது எதிர்பார்ப்பு என்றாரவர்.
“இம்மாநிலத்தின் மக்கள் அரசு மக்களால், மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆகவே, அனைவரும் மக்களின் கட்டளையை ஏற்று, அதற்கு மதிப்பளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் மாநில மக்களின் 7 முக்கிய கோரிக்கைகளை பிரதமர் முன் வைக்கிறேன்”, என்று கூறிய சேவியர், அக்கோரிக்களைப் பட்டியலிட்டார்.
அக்கோரிக்கைகள்:
1. இம்மாநிலத்திலிருந்து நஜிப் அரசு பெறும் ரிம1,600 கோடிகளுக்கு மேற்பட்ட வரிகளிலிருந்து இம்மாநிலத்திற்குச் சேர வேண்டிய பங்கான 20 விழுக்காடு வரியை, அதாவது ரிம300 கோடியை, ஆண்டுதோறும் இம்மாநிலத்திற்குத் திரும்ப வழங்க வேண்டும். அத்தொகையை இம்மாநிலத்திற்கு வழங்க மறுக்கும் இன்றைய நஜிப் அரசாங்கத்தின் கொள்கை வரி செலுத்தும் மக்கள் முறையான சாலை, வடிகால், மற்றும் இதர வசதிகளைப் பெறுவதைத் தடுத்துள்ளது.
2. இந்த கோத்தா ராஜா தொகுதியில் சாலை நெரிசலைத் தடுக்க ஜே.ஜி சாலை வட்டத்திற்குப் பதில் மேம்பாலம் கட்டப்பட வேண்டும்.
3. இத்தொகுதியில் அதிகமான இந்தியர்கள் வாழ்வதாலும் இங்குள்ள தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாகக் கூடியுள்ளதாலும் மாநில அரசு தாமான் செந்தோசாவில் 2.72 ஏக்கர் நிலமும், அலாம் இம்பியானில் 4 ஏக்கர் நிலமும் தமிழ்ப்பள்ளிகள் கட்ட வழங்கியுள்ளது. அதில் பள்ளிகள் கட்டுவதற்கான அனுமதியை நஜிப் அரசாங்கம் உடனடியாக வழங்க வேண்டும்.
4. குறைந்த வருமானமுடைய இந்தியர்களின் பிள்ளைகள் பெரும்பாலும் தமிழ்ப்பள்ளிகளில் கல்வி கற்பதால், தமிழ்ப்பள்ளிகளுக்கு அதிக மானியம் ஒதுக்கப்படவேண்டும். தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் மானியம் ஏழைகளுக்குக் கொடுப்பதற்கு ஒப்பாகும்.
மேலும், மாநில அரசும் சமூகத் தலைவர்களும் தமிழ்ப்பள்ளிகளுக்கு தங்களுடைய பங்கினையாற்ற அப்பள்ளிகளுக்கு வருகை அளிப்பதைத் தடுக்கும் கல்வி அமைச்சின் தடைஉத்தரவு உடனடியாக அகற்றப்பட வேண்டும்.
5. இந்நாட்டில் தாய்மொழிக்கல்வியின் வளர்ச்சிக்கு பல்கலைக்கழக நுழைவுக்குத் தமிழ், தமிழ் இலக்கியப்பாடங்களின் தேர்ச்சிகளைச் சேர்த்துக் கொள்ளும் பழைய நடைமுறை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
6. இம்மாநில வாழ்க்கைத் தரத்திற்கு ஏற்ப தோட்டத் தொழிலாளர்களும் இதர துறை ஊழியர்களும் குறைந்தபட்சம் ரிம1,500 அடிப்படைச் சம்பளமாகப் பெறுவதற்கு நஜிப் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
7. பள்ளிகளில் மாணவர்களிடையே இன வேறுபாடுகளை வளர்க்கும் இண்டலோக் போன்ற நாவல்களை அகற்ற பிரதமர் நஜிப் உடனடியாக உத்தரவிட வேண்டும். இதுபோன்ற நீண்டகாலமாக இருந்து வரும் விவகாரங்களுக்கு இம்மாநில மக்கள், குறிப்பாக இந்தியர்கள், நல்ல தீர்வை நஜிப் அரசிடமிருந்து எதிர்பார்க்கின்றனர்.
அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு நல்ல தீபாவளி பரிசாக அமையக்கூடிய பதிலை அளித்து மக்களின் வாழ்வை தித்திப்பாக்க வேண்டும்.
அதுவே இவ்வாண்டு அனைத்து இந்திய மக்களுக்கும், குறிப்பாக சிலாங்கூர் மக்களுக்கும், பிரதமர் நஜிப்பின் பாரிசான் அரசாங்கம் வழங்கும் தீபாவளி பரிசாக இருக்க வேண்டும்.