நாடாளுமன்றத் தேர்வுக்குழு (பிஎஸ்சி)-இல் இடம்பெற்றுள்ள பக்காத்தான் ரக்யாட் எம்பிகள், இன்று அக்குழு நான்காவது தடவையாகக் கூடிப்பேசும்போது உடனடியாக நடைமுறைப்படுத்தக்கூடிய சீரமைப்புகளை உடனே அமல்படுத்த வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்துக்கு (இசி) அழுத்தம் கொடுக்க முடிவு செய்திருக்கிறார்கள்.
“அழியா மை, முன்கூட்டிய வாக்களிப்பு போன்ற பரிந்துரைகளை இசி உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இசி-யைக் கட்டாயப்படுத்தும் தீர்மானத்தை பிஎஸ்சி கொண்டுவர வேண்டும் என விரும்புகிறோம்.
“அந்த மையை வாங்குவதற்கு இரண்டு மாதங்கள் ஆகுமென்று இசி கூறுகிறது. எனவே, இந்தப் பரிந்துரையை அமல்படுத்தாமலிருக்க போதுமான கால அவகாசம் இல்லை என்று அது காரணம் காட்ட இடமளித்து விடக்கூடாது என்று விரும்புகிறோம்”, என்று ராசா எம்பி அந்தோனி லோக் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
பிஎஸ்சியில் இடம்பெற்றிருக்கும் மாற்றரசுக் கட்சிப் பிரதிநிதிகளில் ஒருவரான லோக், நாளை பொதுமக்கள் கருத்தைச் செவிமடுக்கும் முன்னர் பிஎஸ்சியின் இடைக்கால அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று அக்குழுத் தலைவர் மெக்சிமஸ் ஜோனிடி ஒங்கிலி அறிவித்திருப்பதை வரவேற்றார்.
அழியா மை, முன்கூட்டிய வாக்களிப்பு போன்ற பரிந்துரைகள் அந்த அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் என அந்த டிஏபி நாடாளுமன்ற உறுப்பினர் எதிர்பார்க்கிறார்.
அஞ்சல் வாக்களிப்புக்குப் பதில் முன்கூட்டி வாக்களிக்கும் முறை அமலுக்கு வந்தால் வாக்களிப்பு நாளுக்கு முன்னதாகவே வாக்களிக்கலாம் என்பதால் இராணுவத்தினரும் போலீசாரும் அவர்கள் எந்தெந்தத் தொகுதிகளில் இருக்கிறார்களோ அந்தந்தத் தொகுதிகளிலேயே வாக்களிக்க வேண்டும் என்றும் லோக் கூறினார்.
பிஎஸ்சி,அடுத்த கட்டமாக பொதுமக்களின் கருத்தைச் செவிமடுப்பதற்குமுன்னர், அதன் இன்றைய கூட்டத்தில், தேசியப் பதிவுத் துறை(என்ஆர்டி)யிடமும் இசி-இடமும் வாக்காளர் பட்டியல் தொடர்பில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகள் குறித்தும் அதன் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ள சீரமைப்புகள் குறித்தும் விசாரணை நடத்தும்.
“என்ஆர்டி தேவையான தகவல்களுடன் வரும் என நம்புகிறோம்.
“பிஎஸ்சி முன்னால் வந்துநின்று போதுமான தகவல் இல்லை என்று சொல்லக்கூடாது” , என்று அச்செய்தியாளர் கூட்டத்தில் இருந்த பாஸ் குபாங் கிரியான் எம்பி முகம்மட் ஹத்தா ரம்லி கூறினார்.
வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் உள்ளதையும் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டிருக்கும் சிலருடைய தகுதிகள் சந்தேகத்துக்கு உரியவை என்றும் இசி ஒப்புக்கொண்டிருக்கிறது.
இசி-யும் என்ஆர்டியும் இணையவழி இணைக்கப்பட்டு தகவல்கள் உடனுக்குடன் இற்றைப்படுத்தப்படுத்தப்படுவதாகக் கூறப்படும்போது இறந்தவர்களும் வெளிநாட்டவரும் கூட வாக்காளர்களாக பதிவுசெய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.