கணவன் இல்லாமல் தனியாக ஷாப்பிங் சென்ற பெண் தலை துண்டிப்பு.. தாலிபான்கள் பயங்கரம்

taliban-beating-womanஆஃப்கானிஸ்தானில் கணவன் துணை இல்லாமல் ஷாப்பிங் சென்ற பெண்ணை தாலிபன் தீவிரவாதிகள் தலையை துண்டித்து கொன்றுள்ளனர். தாலிபன் தீவிரவாதிகளின் இந்த வெறிச்செயல் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆஃப்கானிஸ்தானின் சர்-ஈ-பல் மாகாணத்துக்குட்பட்ட லட்டி கிராமம் தாலிபன் தீவிரகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவரின் கணவன் ஈரானில் உள்ளார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

இதனால் கடந்த திங்கட்கிழமை மாலை அந்தப் பெண் தனியாக ஷாப்பிங் சென்றுள்ளார். தாலிபன்களின் சட்டப்படி பெண்கள் கணவன் அல்லது நெருங்கிய உறவு உடைய ஆண்கள் துனையின்றி வெளியே செல்லக்கூடாது.

இந்நிலையில் அந்தப் பெண் தனியாக ஷாப்பிங் சென்றதை அறிந்த தாலிபன் தீவிரவாதி அமைப்பைச் சேர்ந்த நபர் ஒருவர, அவரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். பின்னர் அவரது தலையை துண்டித்து கொன்றுள்ளார். இதனை அம்மாகாண கவர்னரின் செய்தி தொடர்பாளர் உறுதி செய்துள்ளார். இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்த சம்பவம் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஃப்கானிஸ்தானில் 2001ல் தாலிபன்கள் வீழ்ச்சிக்குப் பின்னர் பெண்களின் உரிமையை மீட்பதே முக்கிய குறிக்கோள் என கூறப்பட்டது. ஆனால் மிகவும் கடினமான ஒன்று என்பது தற்போது நிரூபணம் ஆகியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் ஆஃப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் அநீதி அதிகரித்து விருகிறது. தாம்சன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளை நடத்திய சர்வேயில் ஆஃப்கானிஸ்தான் உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடம் என தெரிவித்துள்ளது.

tamil.oneindia.com