உலக அமைதிக்கே முக்கியத்துவம் அளிப்பேன் என்று ஐ.நா.வின் புதிய பொதுச் செயலராகப் பொறுப்பேற்றுள்ள அன்டோனியோ குட்டெரெஸ் கூறியுள்ளார்.
பான் கி-மூனின் பதவிக் காலம் டிசம்பர் 31-ஆம் தேதி முடிவடைந்த நிலையில், குட்டெரெஸ் புதிய பொதுச் செயலராக ஜன.1-ஆம் திகதி முறைப்படி பொறுப்பேற்றார். அதையடுத்து, ஓர் அறிக்கையை அவர் வெளியிடுள்ள குறிப்பிட்டிருப்பதாவது.
உலக அமைதிக்கே நான் முக்கியத்துவம் அளிக்க விரும்புகிறேன். நாம் அனைவரும் உலக அமைதியை முன்னிறுத்துவோம் என்று உறுதி ஏற்க வேண்டும்.
நம்மிடையே உள்ள வேறுபாடுகளைக் கடந்து, இணைந்து செயல்படுவோம் என்று ஒவ்வொரு நாடும், தலைவரும், நாட்டு மக்களும் உறுதி ஏற்போம்.
நாடுகளிடையே உள்ள கருத்து வேறுபாடுகளைப் போக்கி, பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது என்பது மிகவும் கடினமான செயல். நம்மிடையே சண்டை ஏற்படாத வகையில் செயல்படும் திறன் நமக்கு இல்லை.
உலக அமைதியை உறுதி செய்யும் வகையில் செயல்படும் மனப்பான்மையும் நமக்கு இயல்பாக இல்லை. இவற்றைக் கருத்தில் கொண்டு, ஐ.நா. பொதுச் செயலாளர் என்ற முறையில் எனது பணியைச் செய்வேன் என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப், ஐ.நா. குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கூடிக் களிக்கும் கேளிக்கை மையமாக ஐ.நா. மாறிவிட்டது என்று அவர் கேளி செய்திருந்தார்.
ஜன.20-இல் தான் பதவியேற்றதும் அமெரிக்கா-ஐ.நா. உறவில் பெரும் மாற்றம் வரும் என்றார் அவர்.
வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் ஜனாதிபதி பொறுப்பேற்க உள்ளவர் ஐ.நா. குறித்து இது போன்ற கடுமையான கருத்தை வெளியிட்டிருப்பது இதுவே முதற் தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
-http://www.tamilwin.com