சீன நாளேடு ஒன்றில், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், பணி ஓய்வுபெற்ற பிஎன் எம்பிகளை இன்று சந்திப்பார் என்று வெளிவந்திருக்கும் செய்தி விரைவில் பொதுத் தேர்தலை நடத்துவதற்காக நாளை நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்ற வதந்திக்கு மேலும் வலுச்சேர்ப்பதுபோல் அமைந்துள்ளது.
13-வது பொதுத் தேர்தல் தொடர்பில் சந்தித்துப் பேச எல்லா முன்னாள் பிஎன் எம்பிகளுக்கும் நஜிப் அழைப்பு விடுத்திருப்பதாக குவோங் வா இட் பாவ்-வில் வெளிவந்துள்ள அச்செய்தி எந்த வட்டாரத்தையும் மேற்கோள் காட்டவில்லை.
“பிஎன் தேர்தல் பரப்புரைகளுக்கான சுவரொட்டிகள், துண்டறிக்கைகள் முதலியவற்றைத் தயாராக வைத்திருப்பதாகத் தெரிகிறது. அவையெல்லாம் சீனாவில் அச்சடிக்கப்பட்டு கொள்கலன்களில் மலேசியாவுக்கு வந்துள்ளன”, என்று அச்செய்தி அறிக்கை கூறிற்று.
பிஎன்னுக்கு மேலும் ஆதரவு திரட்டும் முயற்சியாக நஜிப், விரைவில் சாதகமான அறிவிப்புகள் சிலவற்றைச் செய்வார் என்றும் அது தெரிவித்தது. தைவானிய பட்டப்படிப்பை அங்கீகரிப்பதும் அவற்றில் ஒன்றாக இருக்கும். தனியார் சீன இடைநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தைவானில் மேல்கல்வி கற்பது வழக்கமாக இருப்பதால் தைவான் பட்டங்களை அங்கீகரிக்க வேண்டும் என்பது சீனர் சமூகத்தின் நீண்டகாலக் கோரிக்கையாகும்.
மந்த நிலையில் உள்ள உலகப் பொருளாதாரத்தால் பல ஆபத்துகள் ஏற்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுவதால் நஜிப் முன்கூட்டியே தேர்தலை நடத்தலாம் என்று ஆண்டுத் தொடக்கத்திலிருந்தே ஆருடங்கள் கூறப்பட்டு வருகின்றன.
சில ஊடகங்களில்,“11” நஜிப்பின் “அதிர்ஷ்ட எண்” என்றும் அதனால் நாளை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு டிசம்பர் 10 வாக்களிப்பு நாளாக அறிவிக்கப்படலாம் என்றும் ஆருடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.