19,000 கி.மீ! சீனா-லண்டன் இடையே நேரடி ரயில் சேவை தொடக்கம்

சீனா, லண்டன் இடையிலான நேரடி சரக்கு ரயில் சேவையை சீனா தொடங்கி வைத்துள்ளது.

சீனாவின் கிழக்கில் உள்ள யீ வூ நகரிலிருந்து புறப்பட்டுச் சென்ற சரக்கு ரயில் இரண்டு வாரங்களில் 12,000 மைல்(19,000 கி.மீ) பயணித்து லண்டன், Barking நிலையத்தை சென்றடையவுள்ளது.

ஐரோப்பா நாடுகளுடனான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை பலப்படுத்தும் நோக்கத்தில் சீனா இந்த ரயில் சேவையை தொடங்கியுள்ளது.

துணிகள், பைகள் மற்றும் பிற வீட்டு உபயோக பொருட்களுடன் பயணத்தை தொடங்கியுள்ள ரயில், கஜகஸ்தான், ரஷ்யா, பெலாரஸ், போலந்து, ஜேர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ் வழியாக பிரித்தானியா செல்கிறது.

விமான சேவை, கப்பல சேவையை விட இந்த சரக்கு ரயில் சேவை ஏற்றுமதியாளர்களுக்கு குறைந்த செலவில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே சீனா, ஜேர்மனி மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கு இடையே ரயில் சேவைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

-http://news.lankasri.com