மகாதிர்: வலைப்பதிவுகள் கருத்துச் சொல்ல ஒரு மாற்றுவழி

வலைப்பதிவுகள் கருத்துச் சொல்ல ஒரு மாற்றுவழி. அரசியல் தலைவர்கள் கருத்துச் சொல்ல ஒரு மாற்றுவழியாக வலைப்பதிவுகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்கிறார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்.

“கட்சிகளில் கருத்துகளைச் சொல்ல இடமளிக்காதபோது நம் கருத்துகளை வெளியிட வலைப்பதிவுகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். கட்சிகளில் அவர்கள் (தலைவர்கள்) சில நேரங்களில் எதையும் செவிமடுக்க விரும்புவதில்லை.

“பேச்சுச் சுதந்திரம் இருக்கிறது. அதனால் ஒருவர் பேசலாம். ஆனால், அதை மற்றவர்கள் காதுகொடுத்து கேட்காவிட்டால் ஒன்றும் செய்ய இயலாதே.” நேற்று, செர்டாங் யுனிவர்சிடி புத்ரா மலேசியாவில், ‘மலேசியர்களின் பொருளாதார தர்மசங்கடம்’ என்ற தலைப்பில் உரைநிகழ்த்திய பின்னர் மகாதிர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவரிடம், அம்னோ மூத்த தலைவர் தெங்கு ரசாலி ஹம்சா கட்சியில் கருத்துச் சொல்ல இடமில்லை என்பதாலேயே அங்காத்தான் அமானா மெர்டேகா(அமானா) என்னும் அரசுசாரா அமைப்பை உருவாக்கியிருப்பதாகக் கூறியிருப்பது பற்றிக் கருத்துக் கேட்கப்பட்டபோது இவ்வாறு கூறினார்.

டிஏபி, பொதுச் சேவை ஊழியர் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்று கூறியது பற்றிக் கருத்துரைத்த மகாதிர், நிலைமை அதற்கு எதிர்மாறானது என்றார்.

“ஆள்களை வேலையிலிருந்து நீக்கி பொதுச்சேவை ஊழியர் எண்ணிக்கையைக் குறைப்பது நல்லதல்ல.

“நான் பிரதமர் பதவியேற்றபோது நம் மக்கள்தொகை 13மில்லியன். பணி விலகியபோது 26 மில்லியன். மக்கள்தொகை பெருகி வருகிறது.அதனால் நமக்குக் கூடுதல் ஊழியர்கள் தேவை”, என்ற மகாதிர் அரசாங்க செலவினத்தைக் குறைக்க தனியார் மயம் ஒரு நல்ல மாற்றுவழி என்றார்.

நாட்டின் வளத்தைப் பகிர்ந்தளிப்பதில் அரசாங்கம் கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்றாரவர்.அதனால் மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு விடக்கூடாது. அதே நேரத்தில் 2020-க்குள் மலேசியா வளர்ந்த நாடாகும் அதன் இலக்கை அடைவதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

உயர் வருமானம் பெறும் நாடாக்குவதில் காட்டப்படும்  வேகத்தில், குறைந்த வருமானம் பெறுவோரை ஓரங்கட்டி விடக்கூடாது.

“இதுதான் மலேசியர்கள் பொருளாதாரத்துறையில் எதிர்நோக்கும் தர்மசங்கடமான நிலை. எனவே, வளர்ந்த நாடாக்கும்  முயற்சியில் என்னென்ன வாய்ப்புகள் கிடைக்கின்றனவோ அவற்றைப் பிடித்துக்கொள்ள மலேசியர்களை தயார்படுத்த வேண்டும்”, என்றாரவர்.

TAGS: