ஐபோன் பெட்டரி தீப்பிடித்தமையின் காரணமாக எகிப்து நாட்டுக்கு சொந்தமான MS804 என்ற விமானம் வெடித்து சிதறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த விமானம் பாரிஸ் நகரில் இருந்து கெய்ரோ நோக்கி மத்திய தரைக்கடல் பகுதி வழியாக பயணித்த வேளை, வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் அந்த விமானத்தில் பயணித்த 66 பேரும் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம், கடந்த ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிலையில், குறித்த விபத்து தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், விமானத்தில் தீப்பரவியதன் காரணமாகவே, விமானம் வெடித்து சிதறியதாக தெரியவந்துள்ளது.
விமானத்தின் கருப்பு பெட்டியை ஆய்வு செய்ததில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. விமானம் வானில் சென்று கொண்டிருந்த போது, தீப்பிடித்தமைக்கான அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, விமான நிலையத்தின் பாதுகாப்பு கெமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்ததில், குறித்த விமானத்தில் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்கள் கொண்டு செல்லப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த ஐபோன் பெட்டரி வெப்பமாகி தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் எனவும் தொடர்ந்து விமானத்தின் இயந்திரத்தில் தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும், இந்த தகவல் தொடர்பில் போதிய ஆதாரங்களுடன் உறுதி செய்யப்படவில்லை எனவும், கூறப்படும் நிலையில், ஆப்பிள் நிறுவனமும் இதற்கு மறுப்பு வெளியிட்டுள்ளது.
தமது அனைத்து உற்பத்திகளும் உரிய சோதனைக்கு பிறகே விற்பனைக்கு கொண்டு செல்லப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
-http://www.tamilwin.com