பக்காத்தான் ரக்யாட் அக்கூட்டணியைப் பதிவுசெய்ய அதன் பிரதிநிதியை அனுப்பி வைத்ததாகச் சொல்லப்படுவதை சங்கப் பதிவக(ஆர்ஓஎஸ்) தலைமை இயக்குனர் அப்துல் ரஹ்மான் ஒத்மான் மறுத்துள்ளார்.
உத்துசான் மலேசியாவுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில், பக்காத்தான் தலைவர்களான பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன், பாஸ் தேர்தல் இயக்குனர் டாக்டர் ஹத்தா ரம்லி, டிஏபியின் அந்தோனி லோக் ஆகியோரை, “பதவிப் பேராசை பிடித்த பொய்யர்கள்” என்று ரஹ்மான் சாடினார்.
பக்காத்தானைப் பதிவுசெய்யும் விசயத்தில் அரசியல் ஏமாற்றுவேலை எதுவும் கிடையாது என்று மறுத்த ரஹ்மான், முதலில் அதைப் பதிவுசெய்ய பிகேஆர் தலைவர் ஜைட் இப்ராகிம் செய்த விண்ணப்பம், அவர் கடந்த ஆண்டு நவம்பரில் பிகேஆரிலிருந்து விலகியபோது இயல்பாகவே ரத்தானது என்றார்.
“நான் (விண்ணப்பத்தை) ஏற்கவில்லை என்று அவர் (சைபுடின்)சத்தம் போட்டிருக்கிறார். நான் அதை ஏற்கவில்லை, ஏனென்றால் விண்ணப்பத்தாரர் இப்போது பிகேஆரில் இல்லை என்பதால் ஏற்பதற்கு (விண்ணப்பம்) அங்கு எதுவும் இல்லை.
“ஜைட்-டின் பார்டி கெசெஜாத்ராஆன் இன்சான் தானா ஆயர் (கித்தா) எளிதாக அங்கீகரிக்கப்பட்டதை வைத்து நான் அரசியல் விளையாட்டு விளையாடுவதாகவும் கூறியுள்ளனர். ஆனால், கித்தா, அங்காத்தான் கெஅடிலான் இன்சான் மலேசியா (அகிம்) என்றிருந்த பெயரில் ஒரு மாற்றத்தைச் செய்தது, அவ்வளவுதான். அது ஒரு புதிய கட்சி அல்ல”, என்றாரவர்.
புதிய விண்ணப்பத்தைச் சமர்பிக்க பாஸின் மத்திய செயல்குழு உறுப்பினர் கமருடின் ஜப்பாரை பக்காத்தான் நியமனம் செய்திருப்பதாக சைபுடின் கடந்த வாரம் விடுத்த அறிக்கை பற்றிக் கருத்துரைத்த ரஹ்மான், கமருடின் பதிவகத்துக்கு வரவே இல்லை என்றார்.
“ஒரு எம்பி வரும்போது என்னால் அவரைச் சந்திக்க முடியாது என்று எப்படி மறுக்க இயலும்? இது சைபுடின் அவிழ்த்து விட்டுள்ள ஒரு புதிய கதையாக இருக்கிறது. நான் என் இலாகாவில் நன்றாக விசாரித்துப் பார்த்துவிட்டேன். கமருடின் புதிய விண்னப்பத்துடன் வரவே இல்லை.”
பக்காத்தான் பதிவுசெய்ய விண்ணப்பம் செய்தால் அதை ஏற்பதில் ஆர்ஓஎஸ்-ஸுக்கு பிரச்னை இல்லை. ஆனால், பக்காத்தானுக்கு விண்ணப்பம் செய்வதில் உள்ளார்ந்த அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை என்று ரஹ்மான் கூறினார்.
மூன்று கட்சிகளைக் கொண்ட பக்காத்தான் ரக்யாட், அது 2008 ஏப்ரலில் உருவான நாள்முதல் சட்டப்பூர்வ அரசியல் கூட்டணியாக பதிவுசெய்ய முயன்று வருகிறது.
13வது பொதுத் தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடத்தப்படலாம் என்று ஆருடம் கூறப்பட்டுள்ள வேளையில் அதற்குள் அது பதிவு செய்யப்படுவது சந்தேகம்தான்.
அப்படிப் பதிவுசெய்யப்படாத நிலையில் ஒரு பொதுவான அடையாளச் சின்னத்தில் அம்மூன்று கட்சிகளாலும் வேட்பாளர்களைக் களமிறக்க முடியாது.