அஞ்சல் வாக்காளர் எண்ணிக்கை 1363% அதிகரிப்பு, நுருல் இஸ்ஸா அதிர்ச்சி

லெம்பா பந்தாய் தொகுதியில் அஞ்சல் வாக்காளர் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக அதிகரித்துள்ளது குறித்து அதன் எம்பி-யான நுருல் இஸ்ஸா அன்வார் கவலை தெரிவித்துள்ளார்.

நவம்பர் மாதம் 2ம் தேதி வெளியிடப்பட்ட அந்தத் தொகுதிக்கான மிக அண்மைய வாக்காளர் பட்டியலில் அஞ்சல் வாக்காளர் எண்ணிக்கை 2,180 என குறிக்கப்பட்டுள்ளது. அந்த எண்ணிக்கை இவ்வாண்டு செப்டம்பர் மாதம் 26ம் தேதி வெறும் 149 ஆக மட்டுமே இருந்தது. அந்த உயர்வு 1363 விழுக்காடு அதிகரிப்புக்கு சமமானதாகும்.

இதில் கடுமையான விஷயம் என்னவெனில், அந்த அஞ்சல் வாக்காளர்களில் 457 பேர் புக்கிட் ஜலில் கம்போங் போஹோலைச் சேர்ந்தவர்கள். அந்தப் பகுதி லெம்பாய் பந்தாய் தொகுதிக்கு வெளியில் உள்ளதாகும். நுருல் இஸ்ஸா இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் பேசினார்.

“2180 போலீஸ்காரர்கள் அஞ்சல் வாக்காளர்களாக உள்ளனர். அதில் அவர்களுடைய மனைவிகள் சேர்க்கப்படவில்லை. கடந்த பொதுத் தேர்தலில் லெம்பா பந்தாய் தொகுதியில் பிகேஆர் 2,895 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றது.”

தேர்தல் ஆணையம் அந்தக் கண்டுபிடிப்புக்களை உறுதி செய்துள்ளதாகவும் நுருல் இஸ்ஸா சொன்னார். லெம்பா பந்தாய் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் கண்டு பிடிக்கப்பட்ட “சந்தேகத்துக்குரிய” மற்ற ஆயிரக்கணக்கான வாக்காளர்களில் அவர்களும் அடங்குவர் என்றார் அவர்.

தேர்தல் ஆணையத்திடமும் புகார் செய்யப்பட்டுள்ளது. அதன் பிரதி தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழுவுக்கும் அனுப்பப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

TAGS: