அமெரிக்காவில், அச்சத்தின் உச்சத்தில்.. ஆசிய நாட்டவர்கள்!

donald-trump_orderedஅமெரிக்க அதிபராக இருந்த பில் கிளின்டன் இந்தியா வந்திருந்த போது வேடிக்கையாக ஒரு கதை சொன்னார்கள்.

லாலு பிரசாத் யாதவை சந்தித்த பில் கிளின்டன், பீகாரை ஓர் ஆண்டு எங்களிடம் ஒப்படையுங்கள். அதை நாங்கள் அமெரிக்காவாக மாற்றிக் காட்டுகிறோம்’ என்று சொன்னாராம்.

அதற்கு லாலு பிரசாத் யாதவ், அதென்ன பிரமாதம். என்னிடம் அமெரிக்காவை ஒரு மாதத்திற்கு ஒப்படையுங்கள். அதை நான் பீகாராக மாற்றிக் காட்டுகிறேன்’ என்று பதிலளித்தாராம்.

அந்த வேலையை இப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்து கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது.

கடந்த ஒரு நூற்றாண்டு அமெரிக்க சரித்திரத்தில் இந்த அளவுக்கு இன வெறியும், குறுகிய கண்ணோட்டமும் இருந்ததே இல்லை என்கிற நிலைமை ஏற்பட்டு விட்டிருக்கிறது.

குறிப்பாக, அமெரிக்கர்களுக்கு மேற்கு ஆசிய முஸ்லிம்கள் மீது ஏற்பட்டிருக்கும் வெறுப்பு, அமெரிக்காவில் வாழும் ஒட்டுமொத்த ஆசியர்களையும் அச்சத்திலும் பீதியிலும் உழல வைத்திருக்கிறது.

தங்களது வேலை பறிபோய் தாய்நாடு திரும்ப வேண்டிய சூழல் ஏற்படுமோ என்கிற பயம் போய், நாம் உயிரோடு நாடு திரும்புவோமா என்கிற அளவுக்கு அச்சம் உச்சம் கொண்டிருக்கிறது.

மூன்று நாள்களுக்கு முன்னால், அமெரிக்காவில் கான்ஸாஸ் மாகாணத்தில் ஒரு மதுபான விடுதியில் தொலைக்காட்சியில் கால்பந்து போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லா, ஆலோக் மதசானி இருவரையும், அமெரிக்கக் கடற்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஆடம் புரின்டன் என்பவர் துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்.

இதில் ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆலோக் மதசானி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நீங்கள் பயங்கரவாதிகள்; அமெரிக்காவைவிட்டு வெளியேறுங்கள்’ என்கிற கோஷத்துடன் அவர் கண்மூடித்தனமாகத் துப்பாக்கியால் சுட்டதிலிருந்து, அது இனவெறியின் வெளிப்பாடு என்பது தெரிகிறது.

அமெரிக்கர்களுக்குக் குறைந்து வரும் வேலை வாய்ப்பும், வெளிநாட்டினர் அதிக அளவில் குடியேறி வருவது குறித்த அச்சமும்தான் காரணம்.

அதை அதிபர் தேர்தலில் தனக்கு சாதகமாக டொனால்ட் டிரம்ப் பயன்படுத்திக் கொள்ள முற்பட்டபோது, அதுவரை நீறு பூத்த நெருப்பாக இருந்த வெறுப்பு, வெளிப்படையாக வெடித்துக் கிளம்பி இருக்கிறது.

அதிபர் டிரம்பின் அறிவிப்புகளும், நடவடிக்கைகளும், உலகின் மிகப் பழமையான ஜனநாயக நாட்டின் அதிபருக்கு உரித்தான கண்ணியத்துக்கு ஏற்றதாக இல்லை.

ஊடகங்கள் மக்களின் எதிரிகள்’ என்றும், பத்திரிகையாளர்கள் அனைவருமே ஊழல் பேர்வழிகள்’ என்றும் அமெரிக்க அதிபர் ஒருவர் விமர்சிப்பது என்பது இதுவரை கேட்டிராத ஒன்று.

நீதித்துறையையும் அதன் மேலாண்மையையும் கேள்வி கேட்கும் அளவுக்குப் போய்விட்டிருக்கிறது அதிபர் டிரம்பின் அதிகார போதை.

தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக உள்ளவர்கள், கை தட்டலையும், டி.ஆர்.பி. ரேட்டிங்கையும் குறிவைத்து செயல்படுவது போல, திடீர் அரசியல்வாதியாகி விட்டிருக்கும் அதிபர் டிரம்ப் நடந்து கொள்வதை அமெரிக்கா வேதனையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

குடியேறிகளால் உருவாக்கப்பட்ட, செழிப்பாக்கப்பட்ட நாடு அமெரிக்கா.

அதிபர் டிரம்பின் உத்தரவின் பேரில், அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை, குடியேற்றம் குறித்த சட்டங்களைக் கடுமையாக்கி, சட்டப்படி குடியேறாதவர்களை வெளியேற்றுவதில் முனைப்புக் காட்டுகிறது.

கடந்த பத்து ஆண்டுகளில் அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டவர் அனைவரும் தங்களது வருங்காலம் எப்படி இருக்கப்போகிறது என்று தெரியாத அச்சத்தில் இருக்கிறார்கள்.

அமெரிக்காவில் வேலை செய்யும், வேலை செய்ய விழையும் இந்தியர்களில் பெரும்பாலானோர் படித்தவர்கள் மற்றும் தொழில்நுட்பம், ஆராய்ச்சி, மருத்துவம், வணிகவியல் ஆகியவற்றில் ஈடுபடுபவர்கள்தான்.

இதுபோன்ற குடியேற்றங்களை தாம் எதிர்ப்பதில்லை என்று அதிபர் டிரம்ப் பலமுறை தெளிவுபடுத்தி இருக்கிறார் என்றாலும், அமெரிக்காவில் நுழையத் தேவையான “ஹெச்-1பி’ அனுமதி கடுமையாக்கப்படும்போது, இந்தியர்கள் பாதிக்கப்படாமல் இருக்கமாட்டார்கள்.

வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறி இருக்கும் இரண்டு உத்தரவுகள் ஊடகங்களுக்குக் கசிந்து விட்டிருக்கின்றன.

அதன்படி, அமெரிக்காவில் குடியேறக் கோரும் விண்ணப்பங்களையும், ஏற்கெனவே குடியேறியவர்கள் குறித்த தகவல்களையும் கடுமையான சோதனைக்கும் மறு பரிசீலனைக்கும் உட்படுத்த வேண்டும் என்று உத்தரவாகி இருக்கிறது.

இரண்டு குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவைத் தாக்கல் செய்ய இருக்கிறார்கள்.

அதன்படி, சட்டப்படி குடியேறுவதற்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் ஹெச்-1பி அனுமதியை பாதிக்குப் பாதியாக குறைக்க வேண்டும் என்றும் குடியேறியவர்களுக்கு அமெரிக்கக் குடியுரிமை தரப்படுவதற்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்றும் கோரியிருக்கிறார்கள்.

இந்த மசோதா நிறைவேறுமானால், அது இந்தியா, இலங்கையை மட்டுமல்ல, பல நாடுகளிலிருந்து அமெரிக்காவை நாடி வரும் அனைவரையும் பாதிக்கும்.

ஒரு நாடு பிற நாட்டவரை குடியேற அனுமதிப்பதும், அனுமதிக்க மறுப்பதும் அதன் உரிமையாக இருக்கலாம். ஆனால், குடியேறிவிட்டிருப்பவர்கள் அச்சத்தில்தான் வாழ முடியும் என்கிற நிலைமையை ஏற்படுத்துவது எந்தவிதத்திலும் நியாயமில்லை.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு ஒரு வேண்டுகோள். வெள்ளை மாளிகையின் கண்ணியத்தையும் அமெரிக்க அதிபர் பதவிக்கான கெளரவத்தையும் குலைக்கும் விதத்தில் செயல்படாதீர்கள்!

-http://www.tamilwin.com