பிஎஸ்சியின் முன்பு சனிக்கிழமை சாட்சியமளிக்கிறார் அம்பிகா

சட்டவிரோதமான அமைப்பு என்று அறிவிக்கப்பட்டிருக்கும் தேர்தல் சீர்திருத்தங்கள் கோரும் பெர்சே 2.0 இயக்கத்தின் தலைவரும், அந்த இயக்கத்தின் தலைவர் என்ற முறையில் நாடாளுமன்ற சிறப்புக்குழுவின் (PSC) முன்பு அவர் சாட்சியமளிக்க முடியாது என்று அக்குழுவின் தலைவரான மேக்சிமஸ் ஜோநிட்டி ஓங்கீலியால் அறிவிக்கப்படிருந்தவருமான அம்பிகா சீனிவாசன் அக்குழுவின் முன்பு நாளை சாட்சியமளிக்க வருமாறு அழைக்கப்பட்டிருக்கிறார்.

“அம்பிகா உட்பட, பதினொரு குழுவினர் அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளனர்”, என்று அக்குழுவின் தலைவர் ஓங்கீலி கூறினார்.

ஆனால், இன்று பின்னேரத்தில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தங்களுடைய சாட்சியத்தை நவம்பர் 12 இல்தான் முன்வைப்பர் என்றும் ஓங்கீலி குறிப்பிட்டுள்ளதுபோல் நாளை அல்ல என்றும் பெர்சேயின் வழிகாட்டி குழு விளக்கம் அளித்துள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று ஐந்து மணி நேரத்திற்கு நடந்த பிஎஸ்சி கூட்டத்திற்கு தலைமை ஏற்றிருந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓங்கீலி, இன்று காலை மணி 9.30 லிருந்து மாலை மணி 5.00 வரையில் நடந்த பொதுவிசாரணையில் பிஎன் பங்காளி மசீச, பாஸ் இளைஞர் பிரிவு, மலேசியன் இளைஞர் மன்றம், முன்னாள் போலீஸ்காரர்கள் சங்கம் மற்றும் டிரேன்ஸ்பேரன்சி இண்டர்நேசனல் மலேசியா ஆகியவை சாட்சியம் அளித்தன.
நாளையிலிருந்து இன்னும் இரு நாள்களுக்கு பொதுமக்களின் கருத்துகள் செவிமடுக்கப்படும். 200 குழுவினர்கள் தங்களுடைய கருத்துகளைத் தெரிவிக்க முன்வந்துள்ளனர்.

இன்றைய விசாரணையில், தேர்தல் ஆணையமும் தேசிய பதிவு இலாகாவும் உள்துறை அமைச்சும் சாட்சிகளாக தோன்றினர்.

ஆனால், அளிக்கப்பட்ட சாட்சியங்கள் விசாரணையின் ஓர் அங்கமாக இருப்பதால், அவர்களின் சாட்சியத்தியத்தை வெளியிட முடியாது என்று ஓங்கீலி கூறினார்.

“இருப்பினும், நாளை நடைபெறும் பொதுவிசாரணை பற்றிய செய்திகளை ஊடகங்கள் சேகரிக்கலாம்”, என்றாரவர்.

ஏஜி அழைக்கப்படுவார்

இரண்டு நாள்கள் நடைபெறும் பொதுவிசாரணைக்குப் பின்னர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்களுக்கு “சட்ட மற்ற அரசமைப்பு கோட்பாடுகள்” குறித்த ஆலோசனையை பிஎஸ்சிக்கு வழங்குவதற்காக சட்டத்துறை தலைவர் (ஏஜி) அழைக்கப்படுவார் என்று ஓங்கீலி தெரிவித்தார்.

ஏஜியிடமிருந்து பெற விருக்கும் ஆலோசனை அழியா மை, முன்பே வாக்களித்தல் போன்ற சீர்திருத்தங்களை அமல்படுத்த தேர்தல் ஆணையத்தைக் கட்டாயப்படுத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற பக்கத்தான் உறுப்பினர்களின் கோரிக்கை சம்பந்தப்பட்டதாக இருக்கும் என்று செய்தியாளர்கள் கூட்டத்திற்கு பின்பு ராசா நாடாளுமன்ற உறுப்பினர் அந்தோனி லோக் கூறினார்.

TAGS: