ஈராக்கில் தாம் படுதோல்வியடைந்துவிட்டதை ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் அல்-பக்தாதி ஒப்புக்கொண்டுள்ளார். ஈராக்கை விட்டு வெளியேறியுள்ள அவர், அதற்குச் சற்று முன்னதாக இந்தத் தகவலை விடுத்துள்ளார்.
மேலும், அரேபியர்கள் அல்லாத மற்ற ஐ.எஸ். உறுப்பினர்களைத் தத்தமது நாடுகளுக்குத் திரும்பும்படியும் அல்லது தற்கொலை குண்டுதாரிகளாக மாறி தாக்குதலில் ஈடுபடும்படியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஈராக்கில் ஐ.எஸ். வசமிருந்த நிலப்பரப்புக்களை மீட்டெடுத்த ஈராக்கிய இராணுவம், ஐ.எஸ். வசமிருந்த மொசூலின் கடைசிப் பகுதியையும் நேற்று கைப்பற்றியது. இதையடுத்து, தோல்வியை ஒப்புக்கொண்ட ஐ.எஸ்.
இயக்கத் தலைவர் அல்-பக்தாதியின் பேச்சு அடங்கிய குறிப்பு ஐ.எஸ். உறுப்பினர்கள் மத்தியில் வினியோகிக்கப்பட்டது. அதில், தாம் ஈராக்கிய இராணுவத்திடம் தோல்வியடைந்துவிட்டதாகவும், இனி ஈராக்கில் நிலைகொண்டிருப்பதில் பயனில்லை என்றும், ஈராக்கில் தமது கட்டளை அலுவலகத்தை அகற்றிவிட்டதாகவும், அரேபியர்கள் அல்லாத உறுப்பினர்கள் ஈராக்கை விட்டு வெளியேறுமாறும் பக்தாதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சொந்த நாடுகளுக்குத் திரும்ப விரும்பாத போராளிகள் தற்கொலை குண்டுதாரிகளாக மாறி முடிந்தவரையில் ஈராக்கியப் படைகளுக்கு சேதத்தை ஏற்படுத்துமாறும் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பையடுத்து, ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரியாவுக்கு இடம் பெயர்ந்துள்ளதாகத் தெரியவருகிறது.
-http://www.athirvu.com