பல்வேறு நாளேடுகளும் ஆருடம் கூறியிருப்பதுபோல் இன்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நாடாளுமன்றத்தைக் கலைத்தாலும்கூட பினாங்கு சட்டமன்றம் கலைக்கப்பட மாட்டாது.
இதனைத் தெரிவித்த முதலமைச்சர் லிம் குவான் எங், அடுத்த ஆண்டில் பொதுத் தேர்தலை நடத்தினால் சட்டமன்றத்தைக் கலைப்பது பற்றித் தாம் ஆலோசிக்கக்கூடும் என்றார்.
முந்தைய பொதுத் தேர்தல் 2008-இல் நடத்தப்பட்டது. அடுத்த பொதுத் தேர்தல் 2013-இல்தான் நடைபெற வேண்டும்.
நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் உள்ளவர் பேரரசர். அவர், பிரதமரின் ஆலோசனையின்பேரில் நாடாளுமன்றத்தைக் கலைப்பார். சட்டமன்றங்கள் அந்தந்த மாநில முதலமைச்சர்கள் அல்லது மந்திரி புசார்களின் ஆலோசனையின்பேரில் கலைக்கப்படுகின்றன.
“பட்ஜெட்டில் வாக்களிக்கப்பட்ட நன்மைகள் முதலில் மக்களுக்குக் கிடைத்து அவர்கள் அவற்றை அனுபவிக்க வேண்டும்.அதன்பின்னரே புதிய தேர்தலை நடத்த வேண்டும்”, என்று டிஏபி தலைமைச் செயலாளருமான லிம் பினாங்கில் நடைபெற்ற ஆங்கிலம் கற்றல், கற்பித்தல் மாநாட்டில் சந்தித்தபோது கூறினார்.
தேர்தல் சீரமைப்புமீதான நாடாளுமன்றக் குழு(பிஎஸ்சி) அதன் பணியை இன்னும் செய்துமுடிக்காத நிலையில் தேர்தலை முன்கூட்டியே நடத்த நாடாளுமன்றத்தைக் கலைக்கக்கூடாது என்றாரவர்.
பிஎஸ்சி இன்று தொடங்கி இரண்டு நாள்களுக்கு பொதுமக்கள் கருத்தைச் செவிமடுக்கும். அக்குழுவிடம் கருத்துத் தெரிவிக்க சுமார் 200 தரப்புகள் ஆர்வம் கொண்டிருக்கின்றன.