தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான பிஎஸ்சி என்ற நாடாளுமன்றத் தேர்வுக் குழு இன்று தனது முதலாவது பொது விசாரணையை நடத்தியது. அதில் தனிநபர்களும் சிவில் சமூக உறுப்பினர்களும் தெரிவித்த தரமான யோசனைகள் குறித்து அந்தக் குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது.
இன்று எழுப்பப்பட்ட விஷயங்கள் “உண்மையானவை, நடைமுறைக்கு ஏற்றவை” என அந்தக் குழுவின் தலைவர் மாக்ஸிமுஸ் ஒங்கிலி விசாரணை முடிவில் கூறினார்.
“உயர்ந்த தரத்திலான யோசனைகள் குழுவிடம் தெரிவிக்கப்பட்டன. நாங்கள் அவற்றை விவாதிக்க நேரம் எடுத்துக் கொண்டோம். நாங்கள் விளக்கங்களையும் கோரினோம்,” என அவர் சொன்னார்.
இன்று மொத்தம் 12 தனிநபர்களும் அமைப்புக்களும் நாடாளுமன்ற தேர்வுக் குழு முன்னிலையில் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இயல்பான பதிவு, வெளிநாடுகளில் உள்ள மலேசியக் குடி மக்கள் வாக்களிப்பது ஆகிய யோசனைகளும் மீண்டும் மீண்டும் கூறப்பட்டன .
மலேசியாவில் வசிக்கும் தங்கள் நாட்டுக் குடிமக்கள் வாக்களிப்பதற்கு எப்படி வசதி செய்து கொடுக்கின்றன என்பதை அறிந்து கொள்ள கோலாலம்பூரில் உள்ள அந்நியத் தூதரகங்களுக்கு பிஎஸ்சி செல்லக் கூடும் என்றும் ஒங்கிலி தெரிவித்தார்.
இன்று தெரிவிக்கப்பட்ட யோசனைகள் அனைத்தும் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருந்ததாக அவர் சொன்னார். சட்ட அம்சங்களும் தேர்தல் நடைமுறை விஷயங்களும் விவாதிக்கப்பட்டன.
‘தீர்வுகளையும் சொல்லுங்கள்’
நாடு முழுவதும் நடத்தப்படும் ஐந்து பொது விசாரணைகளில் கலந்து கொள்கின்றவர்கள் “பிரச்னைகளை சமர்பிப்பதோடு மட்டும் ” நின்று விடாமல் அவற்றைச் சரி செய்வதற்கான யோசனைகளையும் வழங்க வேண்டும் என்றும் ஒங்கிலி கேட்டுக் கொண்டார்.
“தாங்கள் நம்புகின்ற விஷயங்கள் மீது பேசும் போது சிலர் உணர்ச்சி வசப்படுகின்றனர். ஆனால் நாங்கள் மேம்பாட்டுக்கான யோசனைகளையும் நாடுகிறோம். நாங்கள் விரும்பும் தரமான விஷயங்களும் அவைதான்.”
இன்றைய விசாரணைகளில் கலந்து கொண்டவர்களில் அனி ஊய்-யும் ஒருவர் ஆவார். அவர் “பிரதிநிதித்துவம் இல்லாதவர்களை” பிரதிநிதித்தார்.
வெளிநாடுகளில் உள்ளவர்கள், மருத்துவமனையில் இருப்பவர்கள் அல்லது கடமையில் ஈடுபட்டுள்ளவர்கள் உட்பட அனைத்து மலேசியர்களும் வாக்களிப்பதற்கு வசதி செய்யப்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
ஆனால் அதனைச் செய்வதற்கான வழிகள் குறித்து அமைச்சர் வினவிய போது “நான் உங்களுக்குத் தீர்வைத் தரவில்லை. நீங்கள் அதற்காக வேலை செய்ய வேண்டும்,” என அவர் பதில் அளித்தார்.
பெர்சே 2.0 பேரணியில் அவர் ஆற்றிய பங்கிற்காக அவர் Auntie Bersih என அழைக்கப்படுகிறார்.
நாளை ஏழு அமைப்புக்களும் தனிநபர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களில் பெர்சே 2.0ன் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசனும் ஒருவர் ஆவார். அவர் தனிப்பட்ட ரீதியில் பேசுவார்.