வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்களை வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது என்ற மசீச யோசனைக்கு எதிரான நிலையை பெர்சே 2.0 என்ற தூய்மையான நியாயமான தேர்தல்களுக்கான கூட்டமைப்பு எடுத்துள்ளது.
தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு முன்பு கருத்துக்களைத் தெரிவிக்க சென்றுள்ள அவர், மலேசியாகினியிடம் பேசினார்.
போக்குவரத்துச் சிரமங்கள் என்னும் அடிப்படையில் அரசியலமைப்பு உரிமையை நிராகரிப்பது “அதிர்ச்சி அளிக்கிறது” என பெர்சே 2.0ன் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் கூறினார்.
“அதுவும் அவ்வாறு கூறியதற்குப் பின்னர் அதனை சரி செய்ய மசீச எடுத்த நடவடிக்கையும் அதிர்ச்சி அளிக்கிறது, முற்றிலும் அடிப்படையற்றது.”
நாடாளுமன்றத் தேர்வுக் குழு நேற்று நடத்திய முதல் நாள் விசாரணையில் மசீச வழங்கிய யோசனை பற்றி அம்பிகா கருத்துரைத்தார்.
“வாக்களிப்பதற்கான குடிமக்களுடைய உரிமையை மறுப்பதற்கு நாம் போக்குவரத்துச் சிரமங்களைக் காரணமாகப் பயன்படுத்தக் கூடாது. அதனை நடைமுறைப்படுத்துவதற்கு எந்த வகையிலும் ஒத்துழைக்க வெளிநாட்டு வாக்காளர்களும் கூடத் தயாராக இருக்கின்றனர்.”
இந்த நாட்டின் உண்மையான நிலவரத்தை “அறியாத காரணத்தினால்” வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்களை வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது என நேற்று மசீச நாடாளுமன்றத் தேர்வுக் குழுவிடம் கூறியது. அத்துடன் அவர்கள் “சந்தேகத்துக்குரிய பாகுபாடான தவறான” தகவல்களை நம்பியிருக்கக் கூடும் என்றும் அது தெரிவித்தது.
அத்தகைய மக்களை வாக்களிக்க அனுமதிப்பது போக்குவரத்துச் சிரமங்களை ஏற்படுத்தும் என பின்னர் மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் தெளிவுபடுத்தினார்.