பிஎஸ்சி அழிக்க முடியாத மை மீது பெர்சே-யுடன் ‘இணக்கம்’

ஒருவர் பல முறை வாக்களிப்பதைத் தடுப்பதற்கு அழிக்க முடியாத மையைப் பயன்படுத்தும் யோசனையை ஏறத்தாழ தான் ஒப்புக் கொள்வதாக இன்று பிஎஸ்சி என்ற நாடாளுமன்றத் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.

பெர்சே 2. 0 இன் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசனிடம் பேசிய அந்தக் குழுத் தலைவர் மாக்ஸிமுஸ் ஒங்கிலி, அழிக்க முடியாத மையைப் பயன்படுத்துவது தொடர்பில் அந்த கூட்டமைப்புடன் “இணக்கமாக” இருப்பதாகத் தெரிவித்தார்.

“அரசமைப்புச் சட்டத் திருத்தத்துக்கான தேவை தவிர  அதில் நாங்கள் இணக்கமாக இருக்கிறோம்”, என பெர்சே அமைப்பின் எட்டுக் கோரிக்கைகளில் ஒன்று பற்றிக் குறிப்பிட்ட போது அவர் சொன்னார்.

அந்த மையைப் பயன்படுத்துவதற்கு கூட்டரசு அரசமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டுமா என்பது பற்றிய சட்டக் கருத்துக்களை குழு இப்போது பரிசீலித்து வருவதகவும் ஒங்கிலி சொன்னார். அவர் அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சரும் ஆவார்.

 119வது பிரிவின் அடிப்படையில் பார்க்கும் போது நான் குறியிடப்படுவதற்கு விரும்பாததால் வாக்களிப்பதற்கான என் உரிமையை தடுக்கின்றீர்கள், என் உரிமைகளை மீறுகின்றீர்கள் என ஒருவர் சொல்லலாம்,” என்றார் அவர்.

அம்பிகா: அரசியலமைப்புத் திருத்தங்களுக்குத் தேவை இல்லை

அதற்குப் பதில் அளித்த முன்னாள் வழக்குரைஞர் மன்றத் தலைவருமான அம்பிகா, அந்த மையைப் பயன்படுத்துவது தேர்தல் விதிமுறைகளில் சேர்க்கப்பட்டிருந்தால் அரசியலமைப்பை மாற்றாமல் அதனை அமலாக்க இயலும் என்பது என்னுடைய சட்ட அடிப்படையிலான கருத்து எனச் சொன்னார்.

“வாக்களிப்பதற்கு முன்பு அடையாளக் கார்டைக் காட்ட வேண்டும் என்ற தேவை பற்றியும் ஒருவர் அவ்வாறு கேட்க முடியும்.”

தேர்தல் சட்டத்தின் 16வது பிரிவின் கீழ் அதனைச் செய்யலாம். விதிமுறைகளை வகுப்பதற்கு தேர்தல் ஆணையத்துக்கு அந்தப் பிரிவு அதிகாரங்களை வழங்கியுள்ளது. நாடாளுமன்றத்தில் அதனைச் சமர்பித்தால் மட்டும் போதும்”, என்றார் அம்பிகா.

TAGS: