ஜப்பான் நோக்கி ஏவுகணை வீசிய வடகொரியா: கொரியா தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம்

ஜப்பான் கடற்பகுதி நோக்கி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை வடகொரியா சோதனை செய்துள்ளதாக தென் கொரிய அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

குறித்த ஏவுகணை சோதனையானது வட கொரியாவின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள வொன்ஸான் பகுதியில் இருந்து நடத்தப்பட்டுள்ளதாகவும் தென் கொரியா தெரிவித்துள்ளது.

இதனையடுத்து தென் கொரிய ஜனாதிபதி Moon Jae-in உடனடியாக தேசிய பாதுகாப்பு கவுன்சில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளதுடன், குறித்த நடவடிக்கையை ஆராயவும் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜப்பான் கடற்பகுதியில் விழுவதற்கு முன்னர் குறித்த ஏவுகணையானது 450 கி.மீ தூரம் கடந்திருக்கலாம் என தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது மட்டுமின்றி ஜப்பான் அரசும் குறித்த சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளது. வடகொரியாவின் இச்செயல் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களுக்கு எதிரானதாகும் என ஜப்பான் அமைச்சரவை செயலர் Yoshihide Suga காட்டமாக பதிலளித்துள்ளார்.

வடகொரியாவின் தொடர் அத்துமீறல்களை ஜப்பான் ஒருபோதும் சகித்துக் கொள்ளாது எனவும், இது கண்டனத்துக்குரிய செயல் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவின் இச்செயலால் கொரியா தீபகற்பத்தில் மீண்டும் பதற்றமான சூழல் எழுந்துள்ளது.

-lankasri.com