லண்டன் தீவிரவாத தாக்குதல்: இஸ்லாமியர்களுக்கு தடை விதித்ததை நியாயப்படுத்திய டிரம்ப்

donald-trump_orderedலண்டன் தீவிரவாத தாக்குதலையடுத்து இஸ்லாமியர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய விதித்த தடையை நியாயப்படுத்தும் விதமாக டொனால்டு டிரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் ஈரான், ஈராக், சிரியா உள்ளிட்ட 7 இஸ்லாமிய நாட்டு மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்தார்.

இதற்கு உலகெங்கிலும் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், டிரம்பின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதித்தது.

பின்னர், இந்த பட்டியலில் இருந்து ஈராக் நாட்டை நீக்கி சூடான், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, ஏமன் ஆகிய 6 நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குள் நுழைய தடை நீட்டிக்கப்பட்டது.

தற்போது இந்த விவகாரம் குறித்த வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பிரித்தானியாவின் மான்செஸ்டரில் கடந்த வாரம் நடந்த தீவிரவாத தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர்.

அதை தொடர்ந்து நேற்று இரவு லண்டனில் நடந்த தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர்.

தற்போது இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள டிரம்ப், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் பிரித்தானியாவுக்கு எந்த விதமான உதவிகள் செய்ய முடியுமோ அதன் அனைத்தையும் அமெரிக்கா செய்யும் என டுவீட் செய்துள்ளார்.

மேலும், தனது இஸ்லாமியர்கள் மீதான தடை உத்தரவை நியாப்படுத்தி அவர் வெளியிட்டுள்ள மற்றொரு டுவீட்டில், புத்திசாலியாகவும், விழிப்பாகவும் இருக்கவேண்டிய அவசியம் தற்போது உள்ளது.

நம்முடைய உரிமைகளை நீதிமன்றம் நம்மிடம் திருப்பியளிக்க வேண்டிய அவசியம் உள்ளது எனவும் கூடுதல் பாதுகாப்பிற்கு நமக்கு பயண தடையானது அவசியமானது எனவும் கூறியுள்ளார்.

-lankasri.com