நவம்பர் 10 ஆம் தேதி மலேசிய பிரதமர் நஜிப் மற்றும் அவரின் அமைச்சரவை சகாக்கள் கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் சட்டமன்றத் தொகுதியில் இவ்வாண்டு தீபாவளியைக் கொண்டாட இங்கு வருகை புரிந்ததை வரவேற்றோம்.
ஆனால், பிரதமர் நம்புங்கள் என்று கூறிக்கொண்டே இந்தியர்களை ஏமாற்ற முற்படக் கூடாது. பிரதமர் நடத்தும் தீபாவளி உபசரிப்பில் இந்தியர்களின் வாழ்வில் ஒளி வீச பல நல்ல அறிவிப்புகள் வரும் என்று எதிர்ப்பார்தோம்.
மாநில அரசுடன் போட்டி போட்டு கொண்டு பாரிசான் மத்திய அரசும் இச்சமூகத்தின் பிரச்சனைகளைத் தீர்க்கப் பாடுபடும் என்று எதிர்ப்பார்த்த இந்தியச் சமூகத்திற்கும் எனக்கும் ஏமாற்றமாக அமைந்து விட்டது அவரின் வருகை.
இன்று கிடைத்துள்ள அறிய சந்தர்பத்தை நாம் தவறவிடக்கூடாது. மஇகாவின் புதிய தலைமைத்துவம் துடிப்பாக இருக்க வேண்டும். அம்னோ சொல்லுவதற்குத் தலையாட்டியே இச்சமூகத்தின் எதிர்காலத்தைத் தொலைத்து விடக்கூடாது. குறைந்தது எதிர்க்கட்சியின் கோரிக்கையைக் காட்டி மிரட்டியாவது, இந்திய இனத்தை கேவலப்படுத்தும் இண்டலோக் நாவலைப் பள்ளிகளிலிருந்து மீட்டுக்கொள்ள மஇகா பிரதமரை வற்புறுத்தும் என்று எதிர்ப்பார்த்து 7 கோரிக்கைகளையும் பிரதமர் மட்டுமின்றி மக்கள் முன்பும் வைத்தோம்.
ஆனால், பிரதமரும் அம்னோவும் மஇகா தலைவர்களும் மாறவே இல்லை. அவற்றில் ஒன்றைக்கூட நிறைவேற்ற மனமோ ஆற்றலோ இல்லாதவர்கள் என்பதனை நாட்டுக்கு உணர்த்தி விட்டனர்.
இவர்களையா நம்பி நம் பிள்ளைகளின் எதிர்காலத்தை பணயம் வைக்கப் போகிறோம்? இவர்கள் நம்மை நம்பவைத்துக் கழுத்தை அறுப்பதில் மட்டுந்தான் குறியாக உள்ளனர் என்பதனை ‘’நம்பிக்கை’’ என்ற பிரதமரின் உரை, நமது வாக்குச்சீட்டில் மட்டும் குறியாகவுள்ளார் என்பதனைக் காட்டிவிட்டது. அவரின் செய்கை அனைவருக்கும் பெரிய ஏமாற்றமாக அமைந்து விட்டது.
இச்சமூகம் அதன் உழைப்பால் இந்நாட்டை உயர்தியதேயன்றி தன்னை உயர்த்திக் கொள்ளவில்லை. எவரையும் சுரண்டியோ ஏமாற்றியோ வயிறுவளர்க்க வில்லை. அப்படியிறுக்க ஏன் அவர்களை பள்ளிப்பாட புத்தகத்தில் கூட ஏளனப் படுத்த வேண்டும் என்பதை அவரின் கட்சி தலைவர்களுக்கு இந்த ஓர் ஆண்டில் பிரதமர் நஜிப் உணர்த்தியிறுக்க வேண்டாமா?
இச்சமூகத்தின் மனங்குளிர இண்டர்லோக் நாவல் நீக்கத்திற்கு அறிவிப்பு செய்யத்தவறிய பிரதமர் நஜீப்பா, நாளை நம்மைப் பொருளாதார மற்றும் கல்வி அரியாசனத்தில் அமர வைக்கப் போகிறார்?
முன்பிருந்தவர்கள் தவறு செய்து விட்டனர் என்கிறார் பிரதமர், அதனால் நாம் பின்தங்கி விட்டோமாம். இப்பொழுது இவர் மட்டும் என்ன செய்கிறார்? ஆண்டுக்கு ஓர் ஏழைக்கு ரிம500 ரும் மாணவருக்கு ரிம100 ரும் கொடுத்தால் இந்திய சமூகத்தின் ஏழ்மையைத் துடைத்துவிட முடியுமா?
அதைவிட சிலாங்கூர் மாநிலம் அதன் பட்ஜெட்டில் அறிவித்துள்ள அடிப்படை மாதச் சம்பளமான ரிம1500 சிறந்தத் தீர்வாக பிரதமருக்கு தெரியவில்லையா?
இத்தொகுதியில் சிலாங்கூர் மாநில அரசு தமிழ்ப்பள்ளி கட்ட வழங்கிய நிலம் 3 ஆண்டுகளாக காடுமண்டி கிடக்கிறது. பிரதமருடன் தீபாவளியைக் கொண்டாட இங்குள்ள இந்தியர்கள் தயார். ஆனால், மக்களின் ஆனந்தம் அவர்களுடையப் பிள்ளைகள் நல்லப்பள்ளிகளில், முறையான ரீதியில் கல்வி கற்பதைக் காண்பதிலேயன்றி, நீங்கள் போடும் ஒரு வேளை சோற்றிலல்ல என்பதை மஇகா தலைவர்கள் பிரதமருக்கு எடுத்துச் சொல்லியிருக்க வேண்டாமா?
இம்மாநிலத்தில் பாரிசான் ஆட்சியில் எத்தனையோ தமிழ்ப்பள்ளிகள் மூடப்பட்டன. ஏன் அப்பள்ளிகளின் மூன்றின் அனுமதியை மாநில அரசு நிலம் வழங்கியுள்ள இடங்களுக்குத் திரும்ப வழங்கக்கூடாது?
தமிழுக்கும், தமிழர்களுக்கும் பழையவர்கள் செய்ததைத்தானே இன்றைய பிரதமரும், பாரிசானும் செய்கிறது. இவர்களை மட்டும் எப்படி நம்புவது?