தெரேசா மேயின் நிர்க்கதி நிலைக்கு காரணம் யார்?

theresa-mayபிரித்தானிய நாட்டில் நடந்து முடிந்துள்ள பொது தேர்தலில் ஆளும் மற்றும் எதிர்கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் கன்சேர்வேடிவ் கட்சியின் பிரதமரான தெரேசா மேயின் சமீபத்திய அரசியல் நடவடிக்கைகள் இந்த பின்னடைவிற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

கடந்த 2001 முதல் 2010 வரை பிரித்தானிய முன்னாள் பிரதமரான டோனி பிளேயர் தலைமையில் லேபர் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் இரண்டு முறை ஆட்சியை பிடித்தது.

ஆனால், 2010 ஆவது ஆண்டில் நடைபெற்ற பொது தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை இல்லாமல் பழமைவாதக் கட்சியான கன்சேர்வேடிவ் முதன் முதலாக ஆட்சியை பிடித்தது.

அப்போது, எதிர்க்கட்சி தலைவராக இருந்த டேவிட் கமெரூன் முதன் முதலாக பிரதமராக பதவியேற்றார்.

டேவிட் கமெரூனின் முதல் ஆட்சியில் பிரித்தானிய பல்வேறு வளர்ச்சிகளை கண்டதால் கன்சர்வேட்டிவ் கட்சி மீது மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து, 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் மக்கள் செல்வாக்கு பெற்ற கன்சேர்வேடிவ் கட்சி 330 ஆசனங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்தது.

எதிர்கட்சியான லேபர் கட்சி 232 ஆசனங்கள் பெற்றதை தொடர்ந்து எட் மிலிபேண்ட் எதிர்க்கட்சி தலைவராக பதவியில் அமர்ந்தார்.

கமெரூன் இரண்டாவது முறையாக பிரதமர் பதவி வகித்தது முதல் அவரது கட்சிக்கு பெரும் நெருக்கடிகள் ஏற்பட்டு வந்துள்ளது.

முதலாவதாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலக வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை கமெரூனின் ஆட்சியை பலவீனமாக்கியது.

ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்திலேயே பிரித்தானியா நீடிக்க வேண்டும் என கமெரூன் விருப்பப்பட்டுள்ளார். இதற்காக, மக்கள் மத்தியில் கடுமையான பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வந்துள்ளார்.

கமெரூன் பிரதமராக இருந்தபோது இவரது அமைச்சரவையில் தெரேசா மே உள்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார். அதே போல், போரிஸ் ஜான்சன் என்பவர் லண்டன் மேயராக பதவி வகித்து வந்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து நீடிப்பதா? வேண்டாமா? என்பது தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்திய போது பெரும்பான்மையான மக்கள் பிரித்தானிய பிரிய வேண்டும் என வாக்களித்தனர்.

இதனால் கமெரூனின் ஆட்சி ஆட்டம் கண்டுள்ளது. அதேபோல், கமெரூனின் விருப்பதற்கு கன்சேர்வேடிவ் கட்சியினர் கூட போதிய ஆதரவை தரவில்லை.

குறிப்பிட்டு கூறவேண்டும் என்றால், அப்போதையை லண்டன் மேயரான போரிஸ் ஜான்சனும் பிரித்தானிய விலக வேண்டும் என்ற கொள்கையையே கொண்டு செயல்பட்டுள்ளார்.

வேறு வழியில்லாத கமெரூன் இத்தோல்வியை ஏற்றுக்கொண்ட தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது உறுதி செய்யப்பட்டதும், அந்நாட்டின் பொருளாதாரம் தலைகீழாக மாறியது. பங்கு சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்தது. பவுண்ட்டின் மதிப்பு குறைந்தது.

பிரித்தானியாவில் இயங்கிய வங்கிகள் கவலை அடைந்தது. வெளிநாட்டு முதலீடுகள் வருவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதுபோன்ற ஒரு சூழலில், பிரித்தானிய நாட்டிற்கு புதிய பிரதமரை கன்சர்வேட்டிவ் கட்சி அறிவித்தது. பிரித்தனிய குடிமக்களில் 75 சதவிகிதத்தினருக்கும் அறிமுகமில்லாத தெரேசா மே பிரதமராக அறிவிக்கப்பட்டார்.

இதனை பெரும்பான்மையான குடிமக்கள் ஏற்கவில்லை. லண்டன் மேயராக பதவி வகித்து வந்த போரிஸ் ஜான்சன் பிரதமராக தெரிவு செய்யப்படுவார் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வந்தபோது எதிர்ப்பாராத விதமாக அவர் வெளியுறுவு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

கன்சர்வேடிவ் கட்சியின் அடுத்தடுத்த இந்த நகர்வுகள் அக்கட்சி மீது பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதனை நன்கு உணர்ந்துக்கொண்ட லேபர் கட்சியினர் ஆளும் கட்சிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை எழுப்பி மக்கள் மத்தியில் தங்களது ஆதரவை வலுப்படுத்தி வந்துள்ளனர்.

இதுபோன்ற ஒரு சூழலில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும்போது பிரித்தானிய நாட்டிற்கு கூடுதலான பலம் வேண்டும் என எண்ணிய தெரேசா மே பொது தேர்தலை நடத்தி தங்களது நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளார்.

தெரேசா மேயின் இந்த முடிவு அவருக்கு எதிர்மறையாக மாறிடவும் வாய்ப்புள்ளது என பல்வேறு அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால், தெரேசா மே இந்த விமர்சனங்கள் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு ‘தான் செய்வது தான் சரியானது’ என்ற சுயநல முடிவுடன் பொது தேர்தலை அறிவித்துள்ளார்.

தெரேசா மேயிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு சரிந்துள்ளதை நன்றாக கணித்திருந்த லேபர் கட்சியினர் ஆளும் கட்சிக்கு எதிராக கடுமையான தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.

சரியான திட்டமிடுதல் இல்லாமல் அவசர கதியில் அறிவிக்கப்பட்ட பொது தேர்தலின் முடிவுகள் தற்போது தெரேசா மேவிற்கு எதிராகவே அமைந்துள்ளன.

நாடு முழுவதும் 650 ஆசனங்களை கொண்டுள்ள நிலையில், தெரேசா மே தலைமையிலான கன்சேர்வேடிவ் கட்சியினர் 318 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றனர். அதாவது, ஏற்கனவே தங்களது கையில் இருந்த 12 ஆசனங்கள இத்தேர்தல் மூலம் தெரேசா மே இழக்க நேரிட்டுள்ளது.

இதன் மூலம், பொது தேர்தலை அவசர கதியில் நடத்தியது, பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பிற்கு முரணாக நடந்துக்கொண்டது வெளிப்படையாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஆனால், 232 ஆசனங்களுடன் தேர்தலில் போட்டியிட்ட லேபர் கட்சியினர் மக்களின் செல்வாக்கை பெற்றதுடன் கூடுதலாக 29 ஆசனங்களில் வெற்றி பெற்று தற்போது 261 ஆசனங்களை பெற்றுள்ளனர்.

எனினும், இரண்டு கட்சிகளுக்கும் அறுதிப்பெரும்பான்மை இல்லாமல் இருந்தாலும் கூட தெரேசா மேயின் எதிர்ப்பார்ப்பு பொய்த்து போய்யுள்ளது.

ஆட்சியில் நீடிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதால் 10 ஆசனங்களை பெற்றுள்ள ஜனநாயக யூனியன் கட்சியுடன் கூட்டணி அமைக்க தெரேசா மே முடிவு செய்துள்ளார்.

அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் நீடிப்பதை விட்டுவிட்டு, தற்போது பெரும்பான்மை இல்லாமல் எப்போது கூட்டணி விலகும்? எப்போது ஆட்சி கவிழும் என்ற அச்சத்தில் ஆட்சியை தொடர வேண்டிய நிற்கதி நிலைக்கு தெரேசா மே தள்ளப்பட்டுள்ளார்.

அறுதிப் பெரும்பான்மை இருந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய விலகுவது தொடர்பாக பேச்சு வார்த்தை நிகழ்த்தி இருந்தால் ஓரளவிற்கு தெரேசா மேவிற்கு பலம் கிடைத்திருக்கும்.

ஆனால், 12 ஆசனங்களை இழந்து அறுதிப்பெரும்பான்மையை இழந்துள்ள இச்சூழலில் பிரித்தானிய விலகுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினால் அது தெரேசா மேவிற்கு கூடுதலான சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

-tamilwin.com