வெளிநாட்டிலுள்ள 6 வாக்காளர்கள் இசிமீது வழக்கு தொடரலாம், நீதிமன்றம் தீர்ப்பு

வெளிநாட்டில் வசிக்கும் ஆறு வாக்காளர்கள், தேர்தல் ஆணையம்  தங்களைத்  தொலைவில்-உள்ள வாக்காளர்கள் என்று பதிவுசெய்ய வேண்டும் என்று வழக்காட கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இவ்விவகாரத்தில் இசியின் முடிவை நீதிமன்ற மேலாய்வுக்குக் கொண்டுசெல்ல அனுமதிக்கேட்டு அவர்கள் செய்திருந்த விண்ணப்பத்தை ஏற்று நீதிபதி ரொஹானா யூசுப் தீர்ப்பளித்தார்.

இசி-யைப் பிரதிநிதித்த அரசுத்தரப்பு மூத்த வழக்குரைஞர் அம்ர்ஜிட் சிங் அவ்விண்ணப்பத்துக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.

வழக்கின்மீது மேல்நடவடிக்கை பற்றி முடிவுசெய்ய டிசம்பர் 13-ம் நாளும் விசாரணைக்கு ஜனவரி 3-ம் நாளும் நிச்சயிக்கப்பட்டுள்ளன. வாக்காளர்கள் அறுவரின் வழக்குரைஞர் எட்மண்ட் பூன் தீர்ப்பை வரவேற்றார்.

“இது வெளிநாட்டில் உள்ள 700,000 முதல் ஒரு மில்லியன்வரையிலான மலேசிய வாக்காளர்களின் வாக்களிக்கும் உரிமையைத் தீர்மானிக்கும்.

“இந்த விண்ணப்பத்துக்கு ஏஜி எதிர்ப்புத் தெரிவிக்காததை எண்ணி மகிழ்ச்சி கொள்கிறோம்”, என்றாரவர்.

டாக்டர் தியோ ஹோன் சியோங்கும் மேலும் ஐவரும், இசி தங்களை அஞ்சல்வழி வாக்களிக்கும் உரிமைகொண்ட ‘தொலைவில்-உள்ள வாக்காளர்கள்’ என்பதற்குப் பதிலாக சாதாரண வாக்காளர்களாகவே வகைப்படுத்தியிருப்பதை எதிர்த்து அக்டோபர் 25-இல் அந்த விண்ணப்பத்தைத் தாக்கல் செய்திருந்தனர்

TAGS: