செய்தி இணையத் தளமான மலேசியாகினிக்கு எதிராக சரவாக் முதலைமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட் தொடுத்துள்ள அவதூறு வழக்கில் இரண்டு தரப்புக்களுக்கும் தீர்வு காணத் தவறியதைத் தொடர்ந்து விசாரணை நிகழும்.
அடுத்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி தொடக்கம் 12ம் தேதி வரை விசாரணை நடைபெறும் என நீதித் துறை ஆணையாளர் ரோஸிலா யோப் அறிவித்தார். அந்த வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிர்வாகத்துக்காக கொண்டு வரப்பட்டது.
அந்த விசாரணை தொடர்பான வழக்கு நிர்வாகம் மீண்டும் டிசம்பர் 13ம் தேதி நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
மலேசியாகினி சார்பில் வழக்குரைஞர் பாஹ்ரி அஸாட்-டும் தாயிப் சார்பில் வழக்குரைஞர் யீ மெய் கென் -னும் ஆஜரானார்கள்.
அந்த வழக்கில் வாதியான தாயிப் பிரதிவாதியான மலேசியாகினி முதலில் வழக்கு விசாரணையைத் தொடங்க வேண்டும் எனத் தாம் விரும்புவதாகக் கோட்டி காட்டியுள்ளார் என நீதிமன்றத்துக்கு வெளியில் பாஹ்ரி கூறினார்.
“வழக்கமாக தமக்கு வழக்கு இருப்பதை வாதியே முதலில் நிரூபிக்க வேண்டும். ஆகவே தாயிப் நீதிமன்றத்திற்கு முதலில் வரவேண்டியதில்லை என்பதே அதன் பொருள் ஆகும். அவர் சாட்சிக் கூண்டில் ஏற வேண்டிய அவசியம் இப்போதைக்கு இல்லை.”
அத்தகைய ஏற்பாடு ஒப்புக் கொள்ளக் கூடியதா என்பது மீது தாம் மலேசியாகினியுடன் ஆலோசனை கலக்கப் போவதாகவும் பாஹ்ரி சொன்னார்.
கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இரண்டு தரப்புக்களும் செப்டம்பர் 9ம் தேதிக்குள் நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்வு காண்பதற்கான காலக்கெடுவை ஜுலை மாதம் முதல் தேதி வழங்கியது.
நான்கு ஆண்டு கால வழக்கு
அந்த வழக்கு சரவாக்கிலிருந்து வெட்டு மர உருளைகளைக் கொண்டு வந்த ஜப்பானிய கப்பல்போக்குவரத்துக் குழாம் ஒன்று செலுத்திய பணம் “சட்டவிரோதமான செலவுகள்” என ஜப்பானிய வரி அதிகாரிகள் கண்டு பிடித்தது பற்றி வெளியிடப்பட்ட பல கட்டுரைகள் சம்பந்தப்பட்டதாகும். அந்த வழக்கு 2007ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது.
தாயிப் மற்றும் அவரது குடும்பத்துடம் தொடர்புடையது எனக் கூறப்படும் ஹாங்காங்கை தளமாகக் கொண்ட ரீஜண்ட் ஸ்டார் என்னும் நிறுவனத்துக்கு கையூட்டாக 32 மில்லியன் ரிங்கிட்டை ஜப்பானிய போக்குவரத்துக் குழாம் கொடுத்ததாக கூறப்பட்டது.
மலேசியாகினி அந்த ஊழலை “32 மில்லியன் ரிங்கிட் கையூட்டு- பெரிய பனிப்பறையின் நுனி” என்னும் தலைப்பில் தனது சொந்தக் கட்டுரையாக வெளியிட்டது.
மலேசியாகினி பிரதிவாதத்தில் கூறப்பட்டிருந்த சில பகுதிகளை அகற்ற வேண்டும் என தாயிப் கோரியதைத் தொடர்ந்து அந்த வழக்கு தேக்கமடைந்திருந்தது.
அந்த முறையீடு கடைசியாக கூட்டரசு நீதிமன்றத்துக்குச் சென்றது. அதனை நிராகரித்த மூவர் கொண்ட நீதிபதிகள் குழு முறையீட்டை நிராகரித்ததுடன் அந்தச் செய்தி இணையத் தளத்துக்கும் இணை பிரதிவாதியான தலைமை ஆசிரியர் ஸ்டீவன் கான்-னுக்கும் 10,000 ரிங்கிட் செலவுத் தொகையையும் வழங்குமாறும் உத்தரவிட்டது.