கத்தார் நெருக்கடி: சௌதி அரேபியா வரம்பு மீறிவிட்டதா?

இறையாண்மை மிக்க அரபு நாடான கத்தார், செளதி அரேபியா தலைமையில் அதன் வளைகுடா கூட்டாளி நாடுகளால் முன்னுதாரணமற்ற பொருளாதாரத் தடைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி செய்து வருவது , பிராந்திய ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் நடந்துகொண்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக கத்தார் மீது பொருளாதார மற்றும் இராசதந்திர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், கத்தார் இந்த இரு குற்றச்சாட்டுகளையும் மறுத்து வருகிறது.

இதனால் தற்போது, வான்பரப்பு அதற்கு மூடப்பட்டுள்ளது, இறக்குமதிகள் எல்லைப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், கத்தாரிலிருந்து இந்த வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் கத்தாரி பிரஜைகளும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

வளைகுடா நாடுகளின் கூட்டுறவுக் கவுன்சில் உருவகப்படுத்தும், வளைகுடா அரபு ஒற்றுமை என்ற முகமூடி இதன் மூலம் விலகியுள்ளது.

தற்போது நிலவி வரும் இந்த சர்ச்சைகள் பேச்சுவார்த்தைகளின் மூலம் நிவர்த்தி செய்யப்பட்டாலும், வளைகுடாவில் இதற்கு முன்னர் நிலவி வந்த இணக்கமான சூழ்நிலை இனிமேலும் நீடிக்காது.

வரைபடம்

இந்த நடவடிக்கை இப்பகுதியை புதிய மற்றும் அபாயகரமான பாதைக்குத் தள்ளும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

டிரம்ப் அம்சம்

கத்தார் மீதான இந்த நடவடிக்கையை செளதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், பஹ்ரைன் மற்றும் எகிப்து உள்ளிட்ட நான்கு நாடுகள்தான் முதன் முதலாக முன்னெடுத்தன. குறிப்பிட்ட இந்த நான்கு நாடுகளும் சுன்னி பிரிவை சேர்ந்த இஸ்லாமிய தலைவர்களால் வழி நடத்தப்படுகின்றன. மேலும் இரான் மற்றும் அரசியல்மயமான இஸ்லாம் ஆகிய இரண்டையும், ஜிஹாதிய வன்முறையையும், இந்த நான்கு நாடுகளும் தங்களுடைய ஆட்சிக்கு குந்தகம் விளைவிக்க கூடியவகையாக கருதுகின்றன. இவை இரண்டையும் கத்தார் ஊக்குவிப்பதாக குறிப்பிட்ட நான்கு நாடுகளும் குற்றம் சாட்டுகின்றன.

இரானைப் பொறுத்தவரை , இந்த நான்கு நாடுகளும் சுமத்தும் குற்றச்சாட்டுகள் மிகவும் அதிகமானதாகத் தோன்றுகிறது.

பாரசீக வளைகுடாவின் தெற்கு பார்ஸ் / வடக்கு டோம் பகுதியில் அமைந்துள்ள, உலகிலேயே மிகப்பெரிய இயற்கை எரிவாயு தளத்தை கத்தார் மற்றும் இரான் ஆகியவை பகிர்கின்றன.

இதனால், பூகோளம் கத்தார் மற்றும் இரான் ஆகிய நாடுகளை அண்டைநாடுகளாக ஆக்கியிருக்கும் நிலையில், அவை இணக்கமான சூழ்நிலையில் இருக்க வேண்டியுள்ளது.

அரசியல் மயமான இஸ்லாத்தைப் பொறுத்தவரை, வளைகுடாவை சேர்ந்த அரச பரம்பரைகளுக்கு கத்தாரின் செயல்பாடுகள் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதை எளிமையாக காணமுடிகிறது.

கத்தாரை தற்போது ஆட்சி செய்துவரும் அல்-தானியின் குடும்பம் தொடர்ச்சியாக இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பை ஆதரித்து வருகின்றது. இந்த அமைப்பு ஒரு இஸ்லாமிய உலகெங்கிலுமான ஒரு இஸ்லாமிய அரசுக்காக ( கேலிஃபேட்) பிரசாரம் செய்து வருகிறது. இத்தகைய ஒரு அரசு அமைந்தால் வளைகுடா நாடுகளில் இருக்கும் தற்போதைய ஆட்சியாளர்கள் தேவையில்லாமல் போய்விடும்.

எகிப்து, லிபியா, சிரியா மற்றும் காசாவில் உள்ள இஸ்லாமிய குழுக்களுக்கு ஆதரவாகவும் கத்தார் இருந்து வருகிறது.

மேலும், கத்தார் அரசின் மூலம் இயங்கிவரும் அல்-ஜசீரா தொலைக்காட்சி

அரபுத் தலைவர்களை விமர்சிக்கவும் அனுமதித்துள்ளனர். கத்தார் அரசை மட்டும் அத்தொலைக்காட்சி விமர்சிப்பதில்லை.

ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் இளவரசர், சேக் முகமது பின் சயீத் அல்- நஹயான் இதுகுறித்து என்னிடம் தெரிவிக்கையில், இஸ்லாமிய சகோதுரத்துவம் பிராந்தியத்திற்கு எப்போதும் நீடித்திருக்கும் ஒரு அச்சுறுத்தல் என்று குறிப்பிட்டார்.

செளதி பிரச்சனைகள் :

பயங்கரவாதத்தைப் பொறுத்தவரை, சற்று தெளிவற்ற நிலையே காணப்படுகிறது.

குறிப்பாக சிரியா மற்றும் இராக்கில் தீவிரவாதக் குழுக்களுக்கு கத்தார் நிதியுதவி செய்து வருவதாக செளதி அரேபியா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் குற்றம் சாட்டுகின்றன.

ஆனால், தங்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகளை மறைப்பதற்கு செளதி அரேபியா மேற்கொள்ளும் போலித்தனமான செயல் இது என்பதே பல்வேறு மக்களின் கருத்தாக இருக்கிறது.

சிரியா அதிபர் பஷர் அல்- ஆசாத்தின் ஆட்சியைக் கவிழ்க்க எடுத்து தோல்வியடைந்த முயற்சியில், செளதி அரேபியா நுற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை சுன்னி பிரிவை சேர்ந்த தீவிரவாத குழுவிற்கு அளித்துள்ளது. ஆனால் அந்தப் பணம், இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் இயக்கத்தின் கைகளில் போய்ச் சேர்ந்திருக்கிறது.

அல்-கயீதாவுடன் தொடர்பு கொண்டிருக்கும் அல்-நுஸ்ரா முன்னணி என்ற இயக்கத்துடன் கத்தார் தொடர்பு வைத்திருந்தது என்பதையும் மறுக்க இயலாது.

2014 -ம் ஆண்டு , குறிப்பிட்ட இந்த தீவிரவாத இயக்கத்தால் பணய கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டிருந்த கத்தார் நாட்டவர்களை கத்தார் நாட்டு உளவுத்துறை அதிகாரிகள் எவ்வாறு மீட்டனர் என்று பிபிசி செய்தியாளர் ப்ராங்க் கார்டனரிடம் தெரிவித்தனர்.

செளதி பட்டத்து இளவரசர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் முகமது பின் சல்மான்
கத்தாருக்கு எதிராக செளதி இளவரசர்

இவர்களை விடுவிக்க, கத்தார் அரசிடம் கணிசமான தொகையை இயல்பாகவே அந்த குழு பெற்றிருக்கும்.

பறவை வேட்டையாடப்போய் கடத்தப்பட்ட கத்தார் அரச குடும்பத்தைச் சேர்ந்த 26 பேரை மீட்பதற்கு 1 பில்லியன் டாலர் தொகையினை சிரியா மற்றும் இரானை சேர்ந்த தீவிரவாத குழுக்களுக்கு கத்தார் அளித்துள்ளதாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் செய்திகள் வெளியாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால், கத்தார் இதை மறுத்தது.

கத்தாரை தனிமைப்படுத்தித் தண்டிப்பது என்பது பல்வேறு நாடுகளின் கூட்டு கருத்து என்றாலும், இதைத் தலைமை தாங்கி நடத்துபவர் 31 வயதே ஆன செளதி இளவரசர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் முகமது பின் சல்மான் என்றும் கூறப்படுகிறது.

செளதி இளவரசர் முகமது பின் சல்மான் எல்லை மீறிவிட்டாரா என்பதே அநேக நபர்களின் பிரதான கேள்வியாகவும் இருக்கிறது.

சௌதி அரேபியா ஏற்கனவே, பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐக்கிய அரபு எமிரேட்டுகளுடன் கூட்டணி வைத்து ஏமனில் முடிவுக்கு வராத, பெரும் அழிவை ஏற்படுத்திய போரில் அது ஈடுபட்டு வருகிறது.

ஷியா குழுவினரால் ஆதிக்கம் நிலவும் சௌதியின் கிழக்கு மாகணத்தில் எழுந்துள்ள கொந்தளிப்பையும் செளதி சமாளித்து வருகிறது.

இது மட்டுமல்லாமல், செளதியில் உள்ள மசூதிகளின் மீது தாக்குதல் நடத்தி வரும் ஐஎஸ் தீவிரவாத குழுவை அடக்கவும் அமெரிக்காவுடன் இணைந்து செளதி செயல்பட்டு வருகிறது.

மேலும், கத்தாரை தனிமைப்படுத்துவதன் உண்மையான நீண்ட கால விலை என்பது பொருளாதார விலையாக இருக்கக்கூடும்..

மேலும், வணிகம் சார்ந்து இயங்கவும் புதிய வேலை வாய்ப்புகளை தங்கள் நாட்டு இளைஞர்களுக்கு உருவாக்கவும், வளைகுடா அரேபிய நாடுகளுக்கு ஸ்திரத்தன்மையும் , வர்த்தகத்துக்கு சினேகமான சூழலும் வேண்டும்.

கத்தார் குறித்து ஏற்பட்டுள்ள இந்த முறுகல் நிலை இதை விட மோசமான சேதத்தை எப்படி ஏற்படுத்தும் என்று கற்பனை செய்வது கடினம்.

இதே சூழ்நிலை தொடர்ந்தால், கத்தார் மட்டுமல்லாது ஒட்டுமொத்த பிராந்தியத்திற்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும். -BBC_Tamil