பாகிஸ்தானில் பயங்கரம்: டேங்கர் லொறி தீப்பிடித்து 123 பேர் உடல்கருகி பரிதாப பலி

பாகிஸ்தானில் எண்ணெய் ஏற்றிச் சென்ற லொறி தீப்பிடித்து எரிந்த விபத்தில் 123 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பஹவல்பூர் நகரில் இன்று காலை எண்ணெய் ஏற்றிச்சென்ற டேங்கர் லொறியானது சாலையின் வளைவில் திரும்பும் போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனால், லொறியிலிருந்த எண்ணெய் சாலையில் ஆறாக ஓடியது. இதையறிந்த, அப்பகுதி கிராம மக்கள் கையில் வாளிகளுடன் எண்ணெய் அள்ள லாரியை முற்றுகையிட்டனர்.

100-க்கும் அதிகமானோர் லாரியிலிருந்து சிந்திய எண்ணெயை அள்ளிக்கொண்டிருக்கும் போது, எதிர்பாராதவிதமாக லொறி தீப்பிடித்து எரிந்தது.

இதனால், லொறியைச் சுற்றியிருந்த 123 பேர் உடல்கருகி பரிதாபமாக பலியாகினர். 75 பேர் தீக்காயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தீ விபத்தின் போது லொறியின் அருகே இருந்த 6 கார்கள் மற்றும் 12 பைக்குகள் எரிந்து நாசமாகின. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டோரில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

-lankasri.com