24 மணி நேரத்தில் 32 பேர் படுகொலை: பிலிப்பைன்சில் பயங்கரம்

பிலிப்பைன்ஸ் நாட்டில் போதை மருந்து கடத்தல் கும்பல் என கண்டறியப்பட்ட 32 பேரை அங்குள்ள பொலிசார் 24 மணி நேர இடைவெளியில் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியாக ரோட்ரிகோ டூடெர்டே பொறுப்பேற்ற பின்னர் போதை மருந்துக்கு எதிரான போரில் இது மிகவும் கொடிய நாள் என பல்வேறு நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரோட்ரிகோ பதவிக்கு வந்த இந்த 14 மாத கால ஆட்சியில் போதை மருந்து கும்பலுக்கு எதிராக கடுமையான போக்கை கடைபிடித்து வருகிறார். போதை மருந்து கும்பலில் தொடர்புடைய நபர்கள் எனக் கருதப்படும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை பொலிசாரும் சிறப்பு காவலர்களும் இதுவரை கொன்று குவித்துள்ளதாக தகவல் வெளியான வண்ணம் உள்ளது.

ஜனாதிபதி ரோட்ரிகோவின் இந்த நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையிலும் தமது குறிக்கோளில் இருந்து விலகப்போவதில்லை என அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் தலைநகர் மணிலா அருகே அமைந்துள்ள புலாக்கான் மாகாணத்தில் 24 மணி நேரத்தில் நடைபெற்ற அதிரடி சோதனையில் சிக்கிய 32 நபர்களை பொலிசார் சுட்டுக் கொன்றுள்ளனர்.

மட்டுமின்றி இந்த வழக்கு தொடர்பில் 109 நபர்களை பொலிசார் கைதும் செய்துள்ளனர்.

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அந்த மாகாணத்தின் உயர் பொலிஸ் அதிகாரி Romeo Caramat, தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கையானது போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு ஒரு எச்சரிக்கையாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இதுபோன்ற நடவடிக்கைகள் மேலும் தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் போதை மருந்து கடத்தல் கும்பலானது பொலிசாரை தாக்கிய நிலையிலேயே தற்காப்புக்காக பொலிசார் திருப்பி தாக்கினர் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். இந்த நடவடிக்கையில் பொலிசாருக்கு எந்த வித காயமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-lankasri.com