பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த சில வாரங்களில் மட்டும் போதை மருந்து கடத்திய 80 பேரை அந்நாட்டு பொலிசார் விசாரணையின்றி சுட்டுக்கொன்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் போதை மருந்து குற்றங்களை தடுப்பதற்காக அந்நாட்டு ஜனாதிபதியான Rodrigo Duterte கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.
சர்வதேச அளவில் ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையிலும் போதை மருந்து குற்றங்களை தடுக்க பொலிசார் துணிச்சலாக செயல்பட வேண்டும் என சமீபத்தில் Rodrigo Duterte உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவை தொடர்ந்து தனிப்படை பொலிசார் ரகசிய வேட்டையை நடத்தி போதை மருந்து கடத்தியவர்களை சுட்டுக்கொன்றுள்ளனர்.
தலைநகரான மனிலாவில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஒரு வாரத்திற்கு முன்னதாக மனிலாவில் 67 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது மட்டுமில்லாமல் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜனாதிபதியின் இச்செயலுக்கு எதிர்க்கட்சியை சேர்ந்த துணை ஜனாதிபதியான Leni Robredo கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
‘சர்வதேச எதிர்ப்புகளை மீறி பிலிப்பைன்ஸ் மக்களை கொன்று குவிப்பது மனித உரிமைகள் மீறிய செயலாகும்’ என துணை ஜனாதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
80 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட தகவல் வெளியானதை தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற நிருபர்களையும் பொலிசார் விரட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-lankasri.com