மாஸ்கோ: ப்ளூவேல் கேமின் மூளையாக செயல்பட்டதாக ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 17 வயது சிறுமியை போலீஸார் கைது செய்தனர். இவர்தான் டாஸ்க்குகளை கொடுத்து வந்தவராம்.
ப்ளூவேல் எனப்படும் உயிரை குடிக்கும் ஆன்லைன் விளையாட்டானது தற்போது உலகமெங்கும் பிரபலமாகி வருகிறது. என்னவென்றே தெரியாமல் இந்த விளையாட்டை விளையாடுவோர் இறுதியாக தங்கள் உயிரை மாய்த்து கொள்கின்றனர்.
மொத்தம் 50 நாள்கள் இந்த விளையாட்டை ஆன்லைனில் விளையாட வேண்டும். அவ்வாறு விளையாடும் போது கையில் பிளேடால் கிழித்து திமிங்கலம் வரைவது, சுடுகாட்டுக்கு செல்ல வைப்பது, திகில் படங்களை பார்க்க வைப்பது உள்ளிட்ட மனதை பாதிக்கும்படி செய்கின்றனர்.
இறுதியில் தற்கொலை
இதுபோன்ற பயம் கலந்த,மிரட்டல் கலந்து டாஸ்குகளை செய்து செய்து பயத்தால் இறுதியில் தற்கொலைக்கு தூண்டப்படுகின்றனர். நாட்டையே உலுக்கி வரும் இந்த கேமின் அட்மினை ரஷ்ய போலீஸார் கைது செய்துள்ளனர்.
17 வயது சிறுமி
ரஷ்யாவை சேர்ந்த 17 வயது சிறுமி, இந்த விளையாட்டை விளையாட தொடங்கினார். அனைத்து டாஸ்க்குகளையும் செய்த அவர், இறுதி சவாலான தற்கொலை செய்து கொள்வதிலிருந்து விடுபட முடிவு செய்தார். அதன்படி தான் தற்கொலை செய்து கொள்வதற்கு பதில் இந்த விளையாட்டின் மூளையாக இருந்து செயல்பட்டு பிறருக்கு கட்டளைகளை பிறப்பிக்கும் அட்மினாக இருப்பதாக தெரிவித்தார்.
அட்மினானார்
இதை ஏற்ற ப்ளூவேல் கேம் நிர்வாகம் இவரையும் அட்மின் ஆக்கியுள்ளது. இதையடுத்து விளையாடுவோருக்கு டாஸ்க்களை வழங்கி வந்தார். யாரேனும் இந்த டாஸ்க்கை செய்ய மறுத்தால் அவர்களையும், அவர்களின் பெற்றோரையும், உறவினர்களையும் கொன்றுவிடுவதாகவும், தன்னிடம் அனைத்து தகவல்களும் உள்ளதாகவும் சிறுமி மிரட்டி வந்தார்.
எந்த பகுதியைச் சேர்ந்தவர்
அந்த சிறுமியின் பெயரை பாதுகாப்பு கருதி போலீஸார் வெளியிடவில்லை. எனினும் அவர் ரஷ்யாவின் காபாரோவ்ஸ்க் கிராய் பகுதியைச் சேர்ந்தவர். இந்த விளையாட்டை விளையாடும் நபர்களுக்கு 50 விதமான கட்டளைகளை பிறப்பித்து வந்தார். இந்த கட்டளைகளை மூலம் விளையாடுவோரை உளவியல் ரீதியாக அதிர்ச்சியூட்டும் சூழல்களை உருவாக்கி கடைசியில் தற்கொலைக்கு தூண்டியதில் மூளையாக செயல்பட்டார். இவர் அட்மின் என்பது மட்டுமல்லாமல் இறப்பு குழுவின் நிர்வாகி (‘death group administrator’) என்று அழைக்கப்பட்டார்.
ப்ளூவேல் கேம் உருவாக்கியவர்
இந்த கேமை உருவாக்கிய ஃபிலிப் புடேகின் என்பவர் ரஷ்யாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் கைது செய்யப்பட்டார். அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்த விளையாட்டானது நாடு முழுவதும் உயிர்களை காவு வாங்கி வந்தது.