அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு டிரம்ப் ஐ.நா. சபையில் நேற்று கன்னி உரையாற்றினார். அவர் 41 நிமிடங்கள் பேசினார். அப்போது, அவருடைய பேச்சில் அனல் பறந்தது. குறிப்பாக அணுஆயுதங்கள் வைத்துள்ள சில நாடுகள் பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் கடுமையாக தாக்கி பேசினார்.
டிரம்ப் கூறியதாவது:- ஐ.நா. சபையில் அணு ஆயுதங்கள் கொண்ட சில முரட்டு நாடுகளும் உள்ளன. இவை பயங்கரவாத்தை மட்டும் ஆதரிக்கவில்லை. மற்ற நாடுகளையும், தங்களது சொந்த மக்களையும் இதன்மூலம் அச்சுறுத்துகின்றன.
மனித குலத்துக்கு எதிராக பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை வைத்துள்ள இதுபோன்ற எதிரிகளை வேரறுப்போம். வடகொரியாவின் அணு ஆயுதங்களால் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் உருவாகி உள்ளது.
இந்த விஷயத்தில் நாங்கள் பெரும் அளவில் பொறுமை காத்து வருகிறோம். அதே நேரம் எங்களை சீண்டினாலும், இதில் எங்களையோ, எங்களது கூட்டணி நாடுகளையோ பாதுகாத்து கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டாலும் வடகொரியாவை முற்றிலுமாக அழிப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.
ராக்கெட் மனிதர்(கிம் ஜாங் அன்) தற்போது தனக்கு தானேயும், தனது பிராந்தியத்தையும் சேர்த்து தற்கொலை திட்டத்தில் ஈடுபடுத்தி வருகிறார். அவருடைய மிரட்டலை சந்திக்க அமெரிக்கா தயாராக இருக்கிறது. அதற்கான திடமும், வலிமையும் எங்களிடம் இருக்கிறது.
ஆனால் அதற்கான அவசியம் ஏற்படாது என்றே நம்புகிறேன். நாடுகள் கூட்டு அமைப்பாக செயல்படுவதை விட இறையாண்மை மிகுந்தவையாக இயங்கிடவேண்டும். நான் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகிக்கும் வரை எல்லாவற்றுக்கும் மேலாக அமெரிக்காவின் நலன்களை பாதுகாப்பதிலும், எங்கள் மக்களுக்கான கடமைகளை நிறைவேற்றுவதிலும்தான் கவனம் செலுத்துவேன். அமெரிக்காவிற்கு மட்டும் அல்ல, அனைத்து நாடுகளின் எண்ணமுமே வருங்காலத்தில் அவர்களின் இறையாண்மையை பாதுகாப்பது என்பதன் மீதுதான் அமையவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட டிரம்பின் கன்னி உரையில், பருவநிலை மாற்றம், பாலஸ்தீனம்-இஸ்ரேல் இடையே அமைதியை ஏற்படுத்துதல்,
மியான்மர் ரோஹிங்யா முஸ்லிம்கள் ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து எந்த கருத்தும் இடம்பெறவில்லை என்றும், அதேபோல் அவர் ரஷியாவையும் அதிகமாக விமர்சிக்கவில்லை எனவும் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
-athirvu.com