அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு

unநியூயார்க், இந்த பூமிப்பந்தில் பேரழிவை உருவாக்கவல்ல ஆயுதங்களில் முதன்மையானவை அணு ஆயுதங்கள். இந்த ஆயுதங்களை ஏராளமான அளவில் வல்லரசு மற்றும் வளரும் நாடுகள் வைத்திருக்கின்றன. தற்போதைய நிலையில் 15 ஆயிரம் அணு ஆயுதங்கள் உலகில் இருப்பதாக நம்பப்படுகிறது.
2-ம் உலகப்போரில் ஜப்பான் மீது அமெரிக்கா வீசிய 2 அணுகுண்டுகள் ஏற்படுத்திய பேரழிவை பார்த்து அதிர்ந்து போன உலக நாடுகள், அணு ஆயுத விவகாரத்தில் மிகுந்த எச்சரிக்கையை கடைப்பிடிக்கின்றன. குறிப்பாக இத்தகைய ஆயுதங்களை ஒழிப்பதில் பல்வேறு நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. இதற்காக சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பே சர்வதேச அளவில் அணு ஆயுதப்பரவல் தடை ஒப்பந்தமும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

எனினும் இத்தகைய ஆயுத பரவலுக்கு தகுந்த கடிவாளம் போட முடியவில்லை. வடகொரியா போன்ற நாடுகள் தொடர்ந்து அணு ஆயுத சோதனைகள் மற்றும் தயாரிப்பில் ஈடுபட்டுதான் வருகின்றன. இது வடகொரியா, அமெரிக்கா இடையேயான பனிப்போருக்கும் வழிவகுத்து உள்ளது.

எனவே அணு ஆயுதங்களுக்கு தடை விதிக்கும் நோக்கில் புதிய ஒப்பந்தம் ஒன்றை ஐ.நா. சபை தயாரித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போடும் நாடுகள் எந்த சூழ்நிலையிலும் அணு ஆயுதங்களை தயாரித்தல், சோதித்தல், விற்பனை செய்தல், பிற நாடுகளிடம் இருந்து கொள்முதல் செய்தல், வைத்திருத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது.

இந்த ஒப்பந்தத்தின் அவசியத்தை சமீபத்தில் விளக்கிய ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ், அணு ஆயுதம் இல்லா ஒரு உலகத்தை உருவாக்குவதற்கான நோக்கத்தில் இது ஒரு முக்கியமான படிநிலை என குறிப்பிட்டார். இந்த ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து போட்டால் மட்டுமே அதை நடைமுறைப்படுத்த முடியும்.

அந்தவகையில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்று வரும் பல்வேறு உறுப்பு நாடுகளின் தலைவர்கள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு வருகின்றனர். அதன்படி பிரேசில், கயானா, தாய்லாந்து, வாடிகன், இந்தோனேஷியா, அயர்லாந்து, அல்ஜீரியா, வெனிசூலா என 50 நாடுகள் கையெழுத்திட்டு உள்ளன. மேலும் 120-க்கும் மேற்பட்ட நாடுகள் ஒப்பந்தத்தை ஆதரித்து வருகின்றன.

இவ்வாறு ஒப்பந்தத்துக்கு ஆதரவாக சிறிய நாடுகள் ஒருபுறம் அணிவகுத்து நிற்க, அணு ஆயுதங்களை வைத்திருக்கும் அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற வல்லரசு நாடுகளும், அவற்றின் நட்பு நாடுகளும் இந்த ஒப்பந்தத்தை புறக்கணித்து இருக்கின்றன. இந்த விவகாரத்தில் தடை நடவடிக்கை மூலம் எந்த நன்மையும் ஏற்படாது என அவை எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
ஆனால் உலகில் தார்மீக தலைமைத்துவத்தை வெளிப்படுத்தும் நாடுகள் இதுபோன்ற கொள்கை முடிவுகளை ஏற்பதன் மூலம் தார்மீக தலைமைத்துவம் பெற்றிருத்தல் அவசியம் என அணு ஆயுத ஒழிப்புக்கான சர்வதேச பிரசாரத்துக்கான செயல் இயக்குனர் பியாட்ரிஸ் பின் கூறியுள்ளார்.

-dailythanthi.com