பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரும், அவருடைய வயது முதிர்ந்த தாயும் சீனாவிலுள்ள சமூக ஊடகங்களில் நட்சத்திரங்களாக பிரபலமடைந்துள்ளனர்.
தென் மேற்கு சீனாவில் அமைந்துள்ள குய்சொள மாகாணத்தை சேர்ந்த பேராசிரியர் ஹூ மிங் என்பவர், ஞாபக சக்தி இழப்பு (அல்சிமர்) நோய் ஏற்பட்டுள்ள தன்னுடைய வயது முதிர்ந்த தாயை கல்லூரிக்கு அழைத்து வந்து, வகுப்பில் அமர வைத்து பாடம் நடத்தி வருவது பற்றி ‘பெய்ஜிங் யூத் டெய்லி’ செய்தித்தாள் வெளியிட்டிருந்த கட்டுரைக்கு ‘சீனா வெய்போ’ பயனாளர்கள் சுமார் 9 ஆயிரம் பேர் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
பேராசிரியரின் தாய்தான் இந்த முதியவர் என்று அறிய வருவதற்குமுன், வகுப்பிற்கு முதலில் வந்தவர்கள் வகுப்பறையில் ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவர் அமர்ந்திருக்கிறார் என்றுதான் எண்ணிக்கொண்டதாக இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“நான் என்னுடைய ‘தியரி’ வகுப்பிற்கு இன்று வந்தேன். எனக்கு பின்னால் ஒரு முதிய பெண்மணி அமர்ந்திருந்தார். எதற்கு என்று எனக்கு தெரியாது? அது என்னுடைய பேராசிரியரின் 80 வயது தாய் என்பது பின்னர்தான் தெரியவந்தது. தன்னுடைய தாயை தனியாக விட்டு வர முடியாது என்பதால், அவர் அவரை வகுப்புக்கு அழைத்து வருகிறார். இதுதான் மகன் பெற்றோருக்கு காட்ட வேண்டிய பயபக்தி. நான் மிகவும் நெகிழ்ந்து போனேன்” என்று ஒரு பயனர் எழுதியுள்ளார்.
இந்தப் பேராசிரியரின் இந்த நடவடிக்கை பற்றிய முதல் பதிவு 2016 ஆம் ஆண்டு வெளிவந்தது. ஆனால், சமீபத்தில்தான் சீன ஊடகங்களால் பரவலாக வெளியிடப்பட்டுள்ளது.
பெருமூளையில் ரத்தம் வெளியேறி பேராசிரியர் ஹூவின் தந்தை 2011 ஆம் ஆண்டு இறந்துபோனார்.
அவருக்கு இளைய சகோதரிகள் இருந்தாலும், தன்னுடைய தாயை பராமரிக்கும் பொறுப்பை பேராசிரியரே ஏற்றுக்கொண்டுள்ளார்,
தன்னுடைய தாய் தன்னை மட்டுமே இனம்கண்டு கொள்வதால், இவரே தாயை பராமரித்து வருகிறார்.
தன்னுடைய தாய் குளிர்பானம், சர்க்கரை, உப்பு அல்லது சோப்பு ஆகியவற்றை கையில் வைத்திருக்கும்போது, அவற்றின் வேறுபாட்டை கூறுவதற்கு முடியாத அளவுக்கு ஞாபக சக்தி இழப்பு நோய் கடுமையாக இருப்பதாக பேராசிரியர் ஹூ தெரிவித்துள்ளார்.
“சில நேரங்களில் தன்னுடைய தாய் வகுப்பில் குட்டி தூக்கம் தூங்குவார். பிற நேரங்களில் தன்னுடைய விரிவுரைகளை கவனிப்பார்” என்று ஹூ ‘பெய்ஜிங் யூத் டெய்லி’ செய்தித்தாளிடம் கூறியுள்ளார்.
தன்னுடைய வகுப்பில் அவர் கீழ்படிதலோடு இருப்பதாகவும், மாணவர்கள் அவரை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
தாயை பராமரிக்க செவிலியர் ஒருவரை அமர்த்தியிருக்கலாமே? என்றதற்கு, தன்னுடைய தாயை தானே பராமரிப்பேன் என்பதால், இந்த கேள்விக்கு இடமே இல்லை என்று பேராசிரியர் ஹூ பதில் கூறிவிட்டார்.
“பேராசிரியர் ஹூ தன்னுடைய தாயை வகுப்புக்கு அழைத்து வருவதற்கு ஆதரவளிக்கவும் இல்லை. எதிர்ப்பு தெரிவிக்கவும் இல்லை” என்று இந்த கல்லூரி நிர்வாகம், ‘பெய்ஜிங் யூத் டெய்லி’யிடம் தெரிவித்துள்ளது.
பேராசிரியர் ஹூவுக்கு இப்போது வயது 58. தான் ஓய்வு பெறுகின்ற வயதில் இன்னும் இல்லை. எனவே வயது முதிர்ந்த தாயை கவனிக்க தனிப்பட்ட முறையில் நேரம் ஒதுக்க முடியவில்லை என்று அவர் இந்த செய்தித்தாளிடம் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தித்தாளின் ‘சீனா வெய்போ’ சமூக ஊடகத்தில் வெளியான இந்த பேராசிரியர் பற்றிய பக்கம் ஒரு லட்சம் லைக்குகளையும், 9 ஆயிரம் மறுமொழிகளையும் (பதில்களையும்) பெற்றுள்ளதோடு, 7 ஆயிரம் பேரால் பகிரப்பட்டுள்ளது.
“பேராசிரியர் ஹூ மிங், பெற்றோரிடம் பயபக்தியுடையவர், சிறந்த ஆசிரியர். இது அவர் கற்பிக்கின்ற பொருளாதார பாடத்தில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் பொருந்துகிறது” என்று வெய்போ பயனாளர்கள் புகழ்ந்துள்ளனர்.
“அவர் பிறருக்கு சிறந்த முன்னுதாரணம்” என்று பயனாளர் ஒருவரால் தெரிவிக்கப்பட்ட கருத்தை 14 ஆயிரம் பேர் ‘லைக்’ செய்துள்ளனர். இந்த பேராசிரியர் மாணவர்களுக்கு சிறந்த பாடத்தை கற்றுக்கொடுக்கிறார் என்று பிறர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தப் பேராசிரியரின் இந்த நடவடிக்கை வகுப்பையோ, மாணவர்களையோ பாதிக்கவில்லை. பேராசிரியர் ஹூ மிகவும் இரக்கமும், பொறுப்புணர்வும் மிக்கவர். பெற்றோரிடம் சிறந்த பயபக்தியுடைய மகன்” என்று இன்னொரு பயனாளர் பதிவிட்டுள்ளார்.
“ஒருபுறம் கல்வி கற்பிப்பது, மறுபுறம் பெற்றோரிடம் பயபக்தி காட்டுவது என தலைசிறந்த கல்வியை மாணவர்களுக்கு அவர் வழங்கி வருவதாக எண்ணுகிறேன்” என்று இன்னொரு பயனாளர் எழுதியுள்ளார்.
2010 ஆம் ஆண்டு ‘லான்செட்’ சஞ்சிகையில் வெளியான ஆய்வின்படி, உலகின் பிற நாடுகளில் உள்ளதைவிட அதிகமானோர் சீனாவில் ஞாபக சக்தி இழப்பு நோயோடு வாழ்வதாக தெரிய வருகிறது,
சீனாவில் வாழும் முதியோரின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்து வருகிறது. “2033 ஆம் ஆண்டு, பணிபுரிவோரைவிட அதிகமானோராக அவர்களை சார்ந்திருப்போர் இருப்பர். அதில் பெரும்பாலனோர் முதியோராக இருப்பர்” என்று ‘நியூ சையின்டிஸ்ட்” சஞ்சிகை வெளியிட்டுள்ளது.
பெற்றோர், முதியோர் மற்றும் மூதாதையருக்கு மரியாதை கொடுப்பது சீன சமூகத்திலும், கலாசாரத்திலும், மிக முக்கியமானதொரு மதிப்பீடாக கருதப்படுகிறது. இந்த அம்சம் பொதுவாகவே சீன சமூக ஊடகங்களில் விவாதிக்கப்படும் கருப்பொருளாகவும் உள்ளது.
இந்த கருத்தாக்கம் கிமு 400 ஆம் ஆண்டை சேர்ந்ததாகும். கன்பியூசிய தத்துவத்தின் மைய நல்லொழுக்கமாக இது விளங்குகிறது. சீனாவின் சிறந்த பிரபல தத்துவ ஞானியான கன்பியூசியஸின் தொடக்கக்கால புத்தகங்களிலும் இது விவரிக்கப்பட்டுள்ளது.
கிமு 206 முதல் கிபி 220 வரையான காலத்தில், ஹான் வம்சத்தில் அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதற்கான முக்கியமானதொரு வரையறைகளில் ஒன்றாக, பெற்றோர், முதியோர், மூதாதையருக்கு மரியாதை கொடுக்கும் நல்லொழுக்கம் இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. -BBC_Tamil