அம்னோ கோட்டையில் பிகேஆர் தேசியப் பேரவை கூடுகிறது

அம்னோ கோட்டை என்று கருதப்படும் ஜோகூர் மாநிலத்தில் அடுத்த வார இறுதியில் பிகேஆர் தேசியப் பேரவைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.

அந்தப் பேரவை, பிகேஆர் செல்வாக்கையும் பக்காத்தான் ராக்யாட் செல்வாக்கையும் உயர்த்தும் என பிகேஆர் நம்பிக்கை கொண்டுள்ளதாக அதன் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் கூறினார்.

இது வரை மற்ற மாநிலங்களில் நடத்தப்பட்ட ஏழு பேரவைகள் நல்ல விளைவுகளைத் தந்திருப்பதாக அவர் சொன்னார். ஆகவே ஜோகூரிலும் அது நடக்கும் என அவர் நம்புகிறார்.

“நீங்கள் கட்சியின் வரலாற்றைக் கவனித்தால் கிள்ளான் பள்ளத்தாக்கு, சிலாங்கூர், பினாங்கு, பெடா, பேராக், கிளந்தான் ஆகியவற்றில் நாங்கள் பேரவைகளை நடத்தியுள்ளோம். அங்கு பிகேஆர், பக்காத்தான் வலிமை கூடியுள்ளது.”

“கூலாயில் உள்ள புலாய் ஸ்பிரிங்ஸ்-ஸில் நவம்பர் 25ம் தேதி தொடங்கும் அந்தப் பேரவை வழி அம்னோ கோட்டை எனக் கருதப்படும் ஜோகூரில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நாங்கள் நம்புகிறோம்,” என்றார் சைபுடின்.

“ஜோகூரில் பிகேஆர் கட்சிக்கும் பக்காத்தானுக்கும் ஆதரவு கூடி வருகிறது. அதனால் அங்கு பேரவையை நடத்த கட்சி முடிவு செய்தது.”

அந்தப் பேரவையில் 2,534 பேராளர்களும் 1,055 பதிவு செய்யப்பட்ட பார்வையாளர்களும் கலந்து கொள்வர். அவர்களைத் தவிர சிவில் சமூக அமைப்புக்கள், முக்கியமான தனிநபர்கள், அந்நிய நாடுகளைச் சேர்ந்த பார்வையாளர்கள் ஆகியோரும் அதில் பங்கு கொள்ள அழைக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் சிந்தனை

அந்தப் பேரவையின் கருப்பொருள் ‘மக்களுக்காக’ என்பதாகும் ( Demi Rakyat ). நான்கு பக்காத்தான் மாநிலங்களிலும் அடையப்பட்டுள்ள சாதனைகளை விளக்குவதும் ஊழல் இல்லாத நிர்வாகத்தை நாங்கள் பரமாரித்து எப்படி வெற்றிகரமாக நடத்தி வருகிறோம் என்பதைக் காட்டுவதும் பேரவையின் நோக்கம் என்றும் சைபுடின் சொன்னார்.

“பக்காத்தான் கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களுக்கும் பிஎன் கட்டுக்குள் உள்ள மாநிலங்களுக்கும் இடையில் நிலவும் வேறுபாட்டை ஜோகூர் மக்களுக்கு விளக்கவும் அது எங்களுக்கு வாய்ப்பளிக்கிறது.”

“வரும் 13வது பொதுத் தேர்தலுக்கான கட்சி எந்திரத்தை வலுப்படுத்தி ஒருங்கிணைப்பது மீதும் அந்தப் பேரவை கவனம் செலுத்தும் என்றும் சைபுடின் சொன்னார்.

நல்ல ஆளுமை, என் எப் சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்தை சூழ்ந்துள்ள ஊழல் உட்பட பிஎன் அரசின் ஊழல்களும் அந்தப் பேரவையின் போது விவாதிக்கப்படும்.

“பேரவை 25ம் தேதி தொடங்கினாலும் 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை கட்சித் தலைவர்கள் ஜோகூர் மாநிலம் முழுவதும் பயணம் செய்து மக்களைச் சந்திப்பர். அதன் வழி மக்கள், கட்சி பற்றி அதிகம் தெரிந்து கொள்வர்,” என்றார் அவர்.

இட ஒதுக்கீட்டுப் பேச்சுக்கள் இன்னும் முடியவில்லை

பிகேஆருக்கும் பக்காத்தான் ராக்யாட் தோழமைக் கட்சிகளான பாஸ், டிஏபி ஆகியவற்றுக்கும் இடையிலான நாடாளுமன்ற மாநிலச் சட்டமன்ற தொகுதி ஒதுக்கீட்டுப் பேச்சுக்கள் இன்னும் நிறைவடையவில்லை என்றும் சைபுடின் அறிவித்தார்.

“அது கிட்டத்தட்ட முடியும் தறுவாயில் உள்ளது. என்றாலும் இன்னும் சில பகுதிகள் மீது பேச்சுக்கள் தொடருகின்றன,” என்றார் அவர்.

ஜோகூரில் பக்காத்தானும் பிகேஆரும் எத்தனை இடங்களைப் பிடிக்கும் என்ற கேள்விக்குப் பதில் அளிக்க சைபுடின் மறுத்து விட்டார்.

“அது கட்சி வியூகம் சம்பந்தப்பட்டதாகும். விவரங்கள் நாங்கள் தர முடியாது.”

பக்காத்தான் கட்டுப்பாட்டுக்குள் உள்ள மாநிலங்களை தக்க வைத்துக் கொள்வது இன்னொரு நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

பக்காத்தான் பதிவு குறித்த கேள்விக்குப் பதில் அளித்த அவர் அது சங்கப் பதிவதிகாரியைப் பொறுத்துள்ளதாகக் கூறினார்.

2009ம் ஆண்டு பக்காத்தானுடைய முதல் விண்ணப்பம் அப்போதைய அதன் இடைக்காலத் தலைவர் ஜைட் இப்ராஹிம் பெயரில் சமர்பிக்கப்பட்டது. ஆனால் அவர் இப்போது கட்சியை விட்டு விலகி விட்டார்.

“ஜைட்-டுக்குப் பதில் பொறுப்பேற்ற தும்பாட் எம்பி கமாருதின் ஜாபார் பெயரில் புதிய விண்ணப்பம் கொடுக்கப்பட்டுள்ளது. சங்கப் பதிவதிகாரியின் பதிலுக்காக நாங்கள் இன்னும் காத்துக் கொண்டிருக்கிறோம்.”

TAGS: