ஆப்கானிஸ்தானில் போலீஸ் பயிற்சி மையத்தில் தற்கொலைப்படை தாக்குதல் 32 பேர் உயிரிழப்பு

காபூல், இந்த பயிற்சி மையத்தின் அருகே நேற்று வெடிகுண்டுகள் நிரப்பிய காரை பயங்கரவாதி ஒருவர் வெடிக்க வைத்தார். பலத்த சத்தத்துடன் குண்டுகள் வெடித்து சிதறின.

அதைத் தொடர்ந்து துப்பாக்கி ஏந்திய தற்கொலைப்படை பயங்கரவாதிகள், அந்த போலீஸ் பயிற்சி மையத்தினுள் நுழைந்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்.

இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 32 பேர் உயிரிழந்ததாகவும், 200 பேர் படுகாயம் அடைந்ததாகவும் முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.

படுகாயம் அடைந்தவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும். பலியானவர்களில் பெண்கள், மாணவர்கள், போலீசார் என பல தரப்பினரும் அடங்குவர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த போலீஸ் பயிற்சி மையம் அமைந்துள்ள பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு தலீபான் பயங்கரவாத இயக்கத்தினர் பொறுப்பேற்றனர்.

இதேபோன்று அங்கு கஜினி மாகாணத்தில், பாதுகாப்பு வளாகம் ஒன்றில் தலீபான்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 10 போலீசார் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன.

-dailythanthi.com