“ஒன் மெனுரோங் ஆடம்பர அடுக்குமாடி வீடுகள் வாடகைக்கு விடப்படுவது பற்றிய விளம்பரங்கள் சிலவற்றைப் பார்த்தேன்.8,000சொச்சம் சதுர அடி கொண்ட ஒரு வீட்டுக்குக் கூறப்பட்ட அதிகப்பட்ச வாடகையே ரிம25,000-தான்.”
ஆடம்பர ‘கொண்டோ’ வாங்கியதை என்எப்சி தற்காக்கிறது
விழிப்பானவன்: நேசனல் ஃபீட்லோட் கார்பரேஷன் (என்எப்சி) தலைவர் முகம்மட் சாலே இஸ்மாயில் அவர்களே, முதலில், நீங்கள் கால்நடை வளர்ப்புத் தொழில் செய்பவர். அந்தக் குறிப்பிட்ட தொழிலைச் செய்வதற்குத்தான் அரசாங்கம் எளிய நிபந்தனைகளில் உங்களுக்குக் கடன் கொடுத்திருக்கிறது. ஆடம்பர அடுக்குமாடி வீடுகள் வாங்குவதற்கு அல்ல.
இரண்டாவதாக, ஆடம்பர அடுக்குமாடி வீடுகள் வாங்கி வாடகைக்கு விடுவது மிகுவருவாய் உடைய ஒரு தொழில்தான். ஆனால், அதிக இலாபத்தில்தான் ஆபத்தும் அதிகம் என்பார்களே. அதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன். அதற்கென்ன, அது உங்களுக்குச் சொந்தமான பணமில்லையே, அதனால் போனால் போகட்டுமே என்றிருப்பீர்கள்.
மூன்றாவதாக, கொண்டோவில் செய்யப்பட்டுள்ள முதலீடு கையில் உள்ள ரொக்கம் போன்றது அல்ல.கால்நடைத் திட்டத்துக்கு உடனடியாக பணம் தேவைப்பட்டால் என்ன செய்வீர்கள்?
கவனிப்பாளன்: கொண்டோவில் போட்ட பணத்தில் 12.9 விழுக்காடு ஆதாயம் திரும்பக் கிடைப்பதாகக் கூறுகிறார் முகம்மட் சாலே. அதாவது மற்ற கொண்டோ முதலீட்டாளர்களுக்குக் கிடைப்பதைவிட இரண்டு மடங்கு அதிகமாக இவருக்குக் கிடைக்கிறது.
அதை வாடகைக்கு அமர்த்தியிருப்பவர்கள் யாரென்று தெரிந்தால், அவர்களும் ஒளிவுமறைவில்லாமல் பேசினால், அவர்கள் ஏன் இவ்வளவு பெரிய தொகையை வாடகையாகக் கொடுக்க முன்வந்தார்கள் என்ற உண்மை தெரிய வரும்.
தே தாரிக்: ஒன் மெனுரோங்கில் 8,352 சதுர அடி கொண்ட ஒரு பெண்ட்ஹவுசின் மாத வாடகை ரிம22,000-தான். அதன் விலை சுமார் ரிம10மில்லியன். அதாவது, வாடகையாக திரும்ப வருவது 2.2விழுக்காடுதான்.
ரிம6.9மில்லியன் கொண்டோவுக்கு எப்படி ரிம70,000 வாடகை கிடைக்கிறது என்பதை என்எப்சிதான் விளக்க வேண்டும். பங்சாரில் ஆடம்பர கொண்டோ ஒன்றுக்கு போட்ட பணத்தில் 12 விழுக்காடு திரும்ப வருகிறது என்பது நான் கேள்விப்படாத விசயமாகவுள்ளது. மலேசியர்களை அறிவிலிகளாக எண்ண வேண்டாம்.
ஜோசபின்: ஒரு காலத்தில் கொண்டோக்கள் முதலீட்டில் 8 விழுக்காட்டை லாபமாகத் திருப்பிக் கொடுத்தன. கொண்டோ விலைகள் விரைந்து உயர்வுகண்டதை அடுத்து அதில் கிடைத்த லாபமும் குறையத் தொடங்கியது. இப்போது 6விழுக்காடு ஆதாயம் கிடைத்தாலே போதுமானது என்று கருதப்படுகிறது.
அமைச்சரின் கணவர் ஆற்றல்மிக்கவர்போலும், சந்தையில் கிடைப்பதைவிட இருமடங்கு லாபத்தை அவரால் பெற முடிகிறது. அதிசயம்தான். ஐயா, நீங்கள் இந்த அதிசயத்தைக் கால்நடை வளர்ப்பிலும் காண்பிக்க வேண்டும்.
அஜீஸி கான்: பங்சாரில் ரிம70,000 வாடகையெல்லாம் கிடைப்பதில்லை.
நம்பிக்கை மோசடி என்பதிலிருந்து திசைதிருப்ப இப்படியெல்லாம் சொல்லப்படுகிறது. அமைச்சர், அவரின் குடும்பதார் எல்லாருக்குமே இதில் தொடர்புண்டு.
இங்கு ஒரு தவறு நிகழ்ந்திருப்பதை அறியாதார் இருக்க முடியாது. ஆனால், தாங்கள் தவறே செய்ய முடியாதவர்கள் என்று நினைப்பவர்கள் அம்னோ அமைச்சர்கள் மட்டுமே.
மாற்றத்தின் முகவர்: 12 விழுக்காடு லாபம் திரும்ப வருகிறது என்றால் ஏன் இரண்டு கொண்டோக்களுடன் நிறுத்தி விட்டீர்கள். கூடுதலாக வாங்கியிருக்கலாமே.
வீரா:அந்த ஊழல்பேர்வழி தேசிய ஃபீட்லோட் திட்டத்துக்கு எளிய நிபந்தனைகளில் வழங்கப்பட்ட கடனைக் கொண்டு ஆடம்பர கொண்டோக்கள் வாங்கியதை நியாயப்படுத்தப் பார்க்கிறார்.
கொண்டோ வாங்குவதாக இருந்தால் உயர்ந்த வட்டிக்கு வங்கியில் கடன் பெறுங்கள். உணவுத் திட்டத்துக்காக கொடுக்கப்பட்ட பொதுமக்கள் பணத்தைப் பயன்படுத்தாதீர்.
மாமாக்புத்ரா: என்எப்சிக்குக் கடனாகக் கொடுக்கப்பட்ட பணத்தை எதற்காக வங்கியில் போட்டு வைக்க வேண்டும்.
கொடுத்த கடன் பயன்படுத்தப்படாவிட்டால் அதைத் திருப்பிக்கொடுப்பது முறையா, கொண்டோவில் ‘முதலீடு செய்வது’ முறையா? கொடுக்கப்படும் நிதியை இதற்குத்தான் பயன்படுத்த வேண்டும் என்ற தெளிவான விதிமுறைகள் வேண்டுமா, வேண்டாமா?
குறைந்த வட்டியில் கடனாகப் பெறப்பட்ட பொதுப்பணத்தை வங்கியில் அதிலிருந்து கிடைக்கும் வட்டித்தொகையை மக்களுக்குத் திருப்பிக் கொடுக்காமல் என்எப்சி அனுபவிப்பது சரியா? பொதுப்பணம் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
மலேசிய ஊழல்-தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) இதைக்கூட கண்டுக்கொள்ளாமல் இருப்பது எப்படி?
மை கீ: தலா ரிம6.9மில்லியனுக்கு வாங்கப்பட்ட இரண்டு கொண்டோக்கள் ரிம70,000 மாத வாடகைக்கு விடப்பட்டுள்ளனவாம்.
வாடகையாக மாதம் ரிம70,000. எங்கே ஐயா கிடைக்கும் இது?.
ஒன் மெனுரோங் ஆடம்பர அடுக்குமாடி வீடுகள் வாடகைக்கு விடப்படுவது பற்றிய விளம்பரங்கள் சிலவற்றைப் பார்த்தேன்.8,000சொச்சம் சதுர அடி கொண்ட ஒரு வீட்டுக்குக் கூறப்பட்ட அதிகப்பட்ச வாடகையே ரிம25,000-தான். அப்படி இருக்க ரிம70,000 கொடுக்கும் அந்த ஏமாளி யார்?