கெரக்கான் கட்சியை நல்ல முறையில் வழி நடத்தத் தவறியதற்காக அதன் தலைவர் டாக்டர் கோ சூ கூன் தலைமைத்துவப் பதவியிலிருந்து விலக வேண்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார்.
கோலாலம்பூரில் நிகழ்ச்சி ஒன்றுக்குப் பின்னர் அவர் நிருபர்களிடம் பேசினார். 2008ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பிஎன் தலைவர் பதவியை அப்துல்லா அகமட் படாவி கைவிட்டது போல பெரும் தோல்வியைச் சந்தித்ததால் கோ-வும் விலக வேண்டும் என்றார் அவர்.
“நான் இதனைச் சொல்வதற்காக வருந்துகிறேன். தனிப்பட்ட முறையில் கோ மிக நல்ல மனிதர். ஆனால் அவர் தமது கடமையில் தவறி விட்டார். அதன் விளைவாக கெரக்கான் தோல்வி கண்டு விட்டது.”
“அவர் வரும் தேர்தலிலும் கெரக்கானை வழி நடத்தினால் அது பிஎன் -னுக்கு விரும்பும் விளைவுகளைக் கொண்டு வராது. அவர் நீண்ட காலத்துக்கு இருந்து விட்டார். திறமையுடையவராக இல்லை. ஆகவே அவர் ராஜினாமா செய்ய வேண்டும்,” என்றார் டாக்டர் மகாதீர்.
கோ, கெரக்கானுக்கும் பிஎன் -னுக்கும் சுமையாகத் தோன்றுகிறார். ஆகவே அவர் விலகி மற்றவர்களுக்கு வழி விட வேண்டும்.
அவர் அதனைச் செய்தால் மற்ற கெரக்கான் உறுப்பினர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அந்தக் கட்சியில் திறமையுடைய மற்ற தலைவர்களும் உள்ளனர்.
வரும் தேர்தலில் நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகள் எதிலும் போட்டியிடப் போவதில்லை என கோ அறிவித்த முடிவு பற்றிக் கருத்துரைத்தார்.
முன்னதாக டாக்டர் மகாதீர், ஜாலான் பெர்டானாவில் “போர் ஒரு குற்றம்” என்ற கண்காட்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். ஈராக் மீது படையெடுப்பதற்காக பொது மக்களுக்கு தவறான தகவல்களை கொடுத்ததற்காக முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீதும் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனொ பிளாய்ர் மீதும் வழக்குப் போடுவதற்கு முன்னோடியாக அந்தக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.