பக்காத்தான் இரண்டு கட்சி முறையை நிராகரிக்கிறது

பினாங்கு பக்காத்தான் ராக்யாட், அந்த மாநில மசீச தெரிவித்த இரண்டு கட்சி அரசியல் முறையை நிராகரித்துள்ளது. பாரிசான் நேசனலுக்குள் கூட ஆடுகளம் சமமாக இல்லை என அது அதற்குக் காரணம் கூறியது. இவ்வாறு பினாங்கு பக்காத்தான் தலைவர்கள் கூறியுள்ளனர்.

2008ம் ஆண்டு 12வது பொதுத் தேர்தலில் வரலாறு காணாத அளவுக்குத் தோல்வி கண்ட பின்னர் மசீச, இரண்டு கட்சி முறையை அமைக்கலாம் என யோசனை கூறி வருகிறது.

பினாங்கு மாநிலச் சட்ட மன்றத்தில் மக்களுடைய குரலாக இயங்குவதற்கு மசீச-வுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என மாநில மசீச செயலாளர் லாவ் சியக் துவான் கூறினார்.

2008 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் டிஏபி, தான் அளித்த பல வாக்குறுதிகளையும் கடப்பாடுகளையும் நிறைவேற்றத் தவறி விட்டதால் பலர் அதிருப்தி அடைந்துள்ளனர் என அவர் மேலும் சொன்னார்.

“மாநிலச் சட்டமன்றத்துக்கு கண்காணிப்பு முறை தேவைப்படுகிறது. ஆனால் பக்காத்தான் பேராளர்களைத் தவிர மற்றக் கட்சிகளுக்குப் போதுமான இடம் இல்லை,” என்றார் அவர்.

“பினாங்கு மாநிலச் சட்டமன்றத்தில் பிஎன் -னுக்கு 11 இடங்கள் மட்டுமே உள்ளன. அவர்கள் அனைவரும் அம்னோவைச் சார்ந்தவர்கள். அதனால் இன அடிப்படை என்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது.”

கெரக்கான், மசீச, மஇகா ஆகியவை அந்தத் தேர்தலில் முழுமையாகத் தோல்வி கண்டன. பினாங்கு அரசாங்கமும் பக்காத்தானுக்கு சென்றது.

“ஆகவே டிஏபி முன்னெடுக்கும் எந்த யோசனையும் பினாங்கு மக்கள் நலனுக்கு பாதகமாக இருக்கக் கூடும். ஏனெனில் எந்தச் சட்டமும் எளிதாக நிறைவேற்றப்படலாம்,” என லாவ் விடுத்த அறிக்கை கூறியது.

“ஆகவே பக்காத்தான் வேண்டுகோள் விடுக்கும் இரண்டு கட்சி முறை பினாங்குச் சட்டமன்றத்தில் முற்றாக இல்லை,” என மசீச மத்தியக் குழு உறுப்பினருமான அவர் சொன்னார்.

வேட்பாளர்களுக்கு கண்மூடித்தனமான ஆதரவு கூடாது

ஒரு கட்சிக்கு கண்மூடித்தனமாக ஆதரவளிப்பதற்கு ஊக்கமூட்டக் கூடாது. அதற்குப் பதில் மக்களுக்கு நன்கு சேவையாற்றக் கூடிய, மக்கள் சிந்தனையைக் கொண்ட, நல்ல பண்புகளைக் கொண்ட, எளிதில் அணுகக் கூடிய  ஒரு வேட்பாளர் ஆதரிக்கப்பட வேண்டும்.”

“ஒரு கட்சி ஆதிக்கம் பெற்ற அரசியல் முறை, ஜனநாயகத்துக்கும் சுதந்திரத்துக்கும் ஆபத்தானது.’

லாவ் கருத்துக்களுக்கு டிஏபி கொம்தார் சட்டமன்ற உறுப்பினர் இங் வெய் எய்க் உடனடியாகப் பதில் அளித்தார். எதிர்த்தரப்புக்கு தள்ளப்படுவதற்கு முன்பு மசீச, இரண்டு கட்சி முறை பற்றி ஒரு போதும்  சிந்தித்தது இல்லை என அவர் சாடினார்.

நாட்டுக்கு இரண்டு கட்சி முறை தேவையென மசீச திடீரென்று விருப்பம் தெரிவித்துள்ளது பற்றியும் அவர் ஐயம் தெரிவித்தார். அதுவும் கடந்த பொதுத் தேர்தலில் தோல்வி கண்ட பின்னர் அந்தக் கட்சி அந்த விஷயத்தை எழுப்பியுள்ளது.

“நாங்கள் அரசாங்கத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாங்கள் இரண்டு கட்சி முறையை வலியுறுத்தி வருகிறோம்.,” என இங் மலேசியாகினியிடம் கூறினார்.

“நமக்கு உள்ள ஒரே வழி அது தான். நாங்கள் நல்ல அரசாங்கத்தை விரும்புகிறோம். ஆனால் கண்காணிப்பும் சோதனையும் இருக்க வேண்டும்,” என மாநில டிஏபி செயலாளருமான அவர் சொன்னார்.

மசீச-வுக்கு இரண்டு கட்சி முறையின் அர்த்தம் என்ன என்பது தெரியுமா ? கடந்த மூன்று ஆண்டுகளில் அது நல்ல எதிர்த்தரப்பாக இருப்பதில் கூடத் தோல்வி கண்டுள்ளது,” என்றார் இங்.

ஆடுகளம் சமமாக இல்லை

பக்காத்தானுக்கு ஆடுகளம் சமமாக இல்லாத வரையில் இரண்டு கட்சி முறை அர்த்தமற்றதாகவே இருக்கும் என பிகேஆர் பந்தாய் ஜெர்ஜாக் சட்டமன்ற உறுப்பினர் சிம் சு சின் கூறினார்.

முக்கிய ஊடகங்கள் பக்காத்தானை அலட்சியம் செய்கின்றன என்றும் பிஎன் ஆதரவாளர்களும் உறுப்பினர்களும் அன்றாடம் அந்த ஊடகங்கள் வழியாக மாநில அரசாங்கத்தை சாடி வருகின்றனர்.

“பக்காத்தானிடமிருந்து பினாங்கை கைப்பற்றுவதற்கு வகுக்கப்பட்டுள்ள வெறும் தந்திரமே அது,” அவர் புன்முறுவலுடன் கூறினார்.

மாநில சட்டமன்றத்தில் எதிர்த்தரப்புக்கு -11 அம்னோ பேராளர்கள் மூலம் ஒரு குரல் இயங்கி வருகிறது என பாயான் பாரு பிகேஆர் தொகுதித் தலைவருமான சிம் சொன்னார்.

“ஆனால் அவர்கள் 2008க்கு முன்பு மாநில அரசாங்கத்தில் தாங்கள் இருந்த காலத்தைப் பற்றி தம்பட்டம் அடித்துக் கொள்வதைத் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை,” என்றார் அவர்.

“அவர்கள் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளவில்லை. இன்னும் அதிகமான பிஎன் பேராளர்கள் இருந்தால் கூட அவர்கள் தங்களையும் தங்கள் சேவகர்களையும் மட்டுமே தற்காத்துக் கொண்டிருப்பார்கள்,” என சிம் மேலும் சொன்னார்.

“இரண்டு கட்சி முறை இருந்தாலும் நாம் மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது. அம்னோ மட்டுமே பிஎன் -னுக்கு பின்னணியில் உள்ள ஒரே ஒரு சக்தி. அந்த நிலை தொடரும்,” என்றார் அவர்.

TAGS: