கெரக்கான் தலைவர் கோ சூ கூன், தலைவர் என்னும் முறையில் தோல்வி கண்டுள்ளதால் தாம் அந்தப் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கேட்டுக் கொண்டுள்ளதை நிராகரித்துள்ளார்.
மலேசியா ஜனநாயக நாடு. ஆகவே மகாதீருக்குச் சொந்தக் கருத்துக்களைச் சொல்வதற்கு தகுதியுள்ளது என பினாங்கு பிஎன் தலைவருமான கோ சொன்னார்.
கெரக்கான் கட்சியை தாம் தொடர்ந்து வழி நடத்துவதா அல்லது வெளியேறுவதா என்ற விஷயம் கட்சியின் உள் விவகாரம்”, என அவர் அந்த முன்னாள் பிரதமருக்குக் கூறினார்.
“நாங்கள் என்ன செய்கிறோம் என்பதும் என்ன செய்ய வேண்டும் என்பதும் எங்களுக்குத் தெரியும். உங்கள் அக்கறைக்கு நன்றி எனப் பினாங்கில் வாவாசான் பல்கலைக்கழக நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் கோ நிருபர்களிடம் கூறினார்.
“உண்மையில் பதவி துறப்பது என்னைப் பொறுத்தவரையில் எளிதான வழியாகும். நான் விட்டு விட்டால் என்னுடைய பொறுப்புக்கள் அனைத்திலிருந்தும் நான் விடுபட்டு விடுவேன்”, என அவர் தொடர்ந்து கூறினார்.
ஆனால் தமக்குப் பொறுப்பு இருப்பதாக அவர் உணர்கிறார். 13வது பொதுத் தேர்தல் அணுகும் இவ்வேளையில் தோழர்களைக் கைவிடக் கூடாது என்றார் கோ.
கெரக்கான் தலைவர்கள் – துணை, உதவித் தலைவர்கள் தங்கள் தொகுதிகளில் போட்டியிடுவதற்குக் கடுமையாக உழைத்து வருகின்றனர். தாம் விலகினால் இன்னும் கூடுதல் சுமையை ஏற்க வேண்டியிருக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
கெரக்கான் கட்சியை நல்ல முறையில் வழி நடத்தத் தவறியதற்காக அதன் தலைவர் கோ, தலைமைத்துவப் பதவியிலிருந்து விலக வேண்டும் என டாக்டர் மகாதீர் நேற்று கூறியிருந்தார்.
2008ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பிஎன் தலைவர் பதவியை அப்துல்லா அகமட் படாவி கைவிட்டது போல பெரும் தோல்வியைச் சந்தித்ததால் கோ-வும் விலக வேண்டும் என்றார் அவர்.
“நான் இதனைச் சொல்வதற்காக வருந்துகிறேன். தனிப்பட்ட முறையில் கோ மிக நல்ல மனிதர். ஆனால் அவர் தமது கடமையில் தவறி விட்டார். அதன் விளைவாக கெரக்கான் தோல்வி கண்டு விட்டது.”
“கோ, கெரக்கானுக்கும் பிஎன்-னுக்கும் சுமையாகத் தோன்றுகிறார். ஆகவே அவர் விலகி மற்றவர்களுக்கு வழி விட வேண்டும்.”