ஓப்ராசி லாலாங் : ஜொகூர் பாருவில் கண்காட்சியும் கருத்தரங்கமும்

ஓப்ராசி லாலாங் – மலேசிய வரலாற்றில் மிக மோசமான மனித உரிமை மீறல்களில் ஒன்றாக வர்ணிக்கப்படுகிறது. கடந்த 27 அக்டோபர் 1987-ல், துன் மகாதீர் தனது ஆட்சியின் போது உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தைப் பயன்படுத்தி, 107 அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், அறிவுஜீவிகள் மற்றும் கல்விமான்களைக் கைது செய்தார். அதோடு, சில பத்திரிக்கைகளின் வெளியீட்டு உரிமத்தையும் அரசாங்கம் தடை செய்தது.

ஒப்ராசி லாலாங் நாட்டின் ஜனநாயக அமைப்பு முறைக்கு எதிர்மறையான சுவட்டைப் பதிவுசெய்து சென்றுள்ளது. பொதுமக்களை ஒடுக்கி அவர்களின் பேச்சுரிமையைத் தடைசெய்து, அரசப் பயங்கரவாதத்தை அரங்கேற்றியது.

எதிர்வரும் டிசம்பர் 10-ம் நாள், சர்வதேச மனித உரிமை நாள். நாட்டில் மோசமாக அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டு வரும் இச்சூழலில், ஓப்ராசி லாலாங் சம்பவம் ஏன் நடந்தது என்பதை விளங்கிக்கொள்வது நமக்கு மிகவும் பயனாக இருக்கும்.

மலேசியர்களின் சுதந்திரமான வாழ்க்கைக்கும் ஜனநாயகப் போராட்டத்திற்கும் எதிராக, இரக்கமற்ற தேசியப் பாதுகாப்பு சட்டம் (சிறப்பு பிரிவு), தீவிரவாத தடுப்பு சட்டம், குற்றவியல் சட்டம் மற்றும் தேசியப் பாதுகாப்பு மன்றச் சட்டம் மட்டுமல்லாமல், கட்டாயமான முறையில் காணாமல் போகும் அச்சுறுத்தல்களையும் நாம் இன்று எதிர்நோக்க வேண்டியுள்ளது.

நவம்பர் 2016 தொடக்கம், இதுவரை 4 சமூக மற்றும் சமய செயல்பாட்டாளர்கள் கடத்தப்பட்டுள்ளனர். ஓராண்டு முயற்சி தொடர்ந்த பின்னும் இவர்கள் காணாமல் போனதற்கான காரணத்தையோ, எங்கு இருக்கிறார்கள் என்ற தகவலையோ அறிய முடியவில்லை.

முப்பது ஆண்டுகளுக்கும் முன்பு நடந்த ஓப்ராசி லாலாங் மற்றும் தற்போது கட்டாயமான முறையில் காணாமல் போகும் இரண்டு சம்பவம் வழி நாம் அறியக்கூடியது என்னவென்றால், மாற்று கருத்துடையவர்கள் மீது அரசு அதிகாரம் கொடுமையான முறையில் நடந்துகொள்ளும்; அச்சம்பவத்தை மூடி மறைக்கவும் முற்படும் என்பதுதான்

ஆகையால், உண்மை நிலையைக் கண்டறிந்து பொது மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். அரசாங்கத்தை இப்பிரச்சனைக்கு முழு பொறுப்பேற்க வழியுறுத்த வேண்டும்

ஓப்ராசி லாலாங் 30-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, ஜொகூர் யெல்லோவ் ஃபிலேம் (JYF), ஜொகூர் செம்பருத்தி தோழர்கள், ஜனநாயகத்திற்கான தியோ பேங் ஓக் பொறுப்பகம், கோலாலம்பூர் ஓப்ராசி லாலாங் 30-ம் நினைவு செயற்குழு இணைந்து, ‘ஓப்ராசி லாலாங் 30-ம் ஆண்டு நினைவு நாள்’ மற்றும் ‘கட்டாயமான முறையில் காணாமல் போனவர்களை வலியுறுத்தம் விழிப்புணர்வு இயக்கம்’ கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் ஆகியவற்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய இரு தினங்களில், ஜொகூர் பாரு, தாமான் மோலேக்கில் (55-A, Jalan Molek 2/4, Taman Molek, JB) அமைந்துள்ள எங்கேஜ் அலுவலகத்தில் நடைபெறும்.

டிசம்பர் 9, சனிக்கிழமையன்று, காலை மணி 11 தொடக்கம் மாலை 7 வரையில் கண்காட்சி, விளக்கப்படம் மற்றும் கருத்தரங்கமும் இடம்பெறும்.

முதல்நாள் நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்டவர்தம் குடும்பத்தாரின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதோடு; 2 தலைப்புகளில் கருத்தரங்கமும் நடைபெறுவுள்ளது.

‘மறக்க முடியாது – ஓப்ராசி லாலாங் எப்படி எங்களின் வாழ்க்கையைத் திசை திருப்பியது’ என்ற தலைப்பில், ஐரீன் சேவியர் (சிலாங்கூர் மகளிர் நட்புறவு இயக்கத்தின் அமைப்பாளர் & ஆலோசகர்) டாக்டர் குவா கியா சூங் (சுவாராம் ஆலோசகர்) மற்றும் சோங் சிங் வீ (வழக்கறிஞர்), அனி முன்ரோ-குவா (எழுத்தாளர்) ஆகியோர் பேசவுள்ளனர். இவர்களில் முதல் மூவரும், ஓப்ராசி லாலாங்கில் தடுத்துவைக்கப்பட்டவர்கள் ஆவர். இது மதியம் 1 மணி முதல் 3 வரை நடைபெறும்.

அடுத்ததாக, ‘மலேசியர்கள், விசாரணையின்றி தடுத்துவைப்பதைப் பற்றி நீங்கள்அறிய வேண்டியது’ என்ற தலைப்பில், டாக்டர் குவா கியா சூங், தியோ சோ லாங் (வழக்கறிஞர், சிங்கப்பூர் ஸ்பெக்ட்ரம் நடவடிக்கையில் தடுத்துவைக்கப்பட்டவர்) மற்றும் இஷாமுடின் ராய்ஸ் (உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் தேசத்துரோகச் சட்டத்தில் கைதாகியவர்) ஆகியோர் பேசவுள்ளனர். இந்நிகழ்ச்சி மாலை 3:30 முதல் 5:30 வரை நடைபெறும்.

10-ம் தேதி, காலை 10 மணி முதல் மாலை 6 வரை ஆவணப்படமும், எங்கேஜ் இயக்குநர் தோமஸ் ஃபான் தலைமையில் கலந்துரையாடலும் இடம்பெறும்.

நிகழ்ச்சி தேசிய மொழியிலும் ஆங்கிலத்திலும் நடைபெறும்.