அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் திரையரங்குகளுக்கு உரிமம் வழங்க செளதி அரேபிய அரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம், கடந்த முப்பது ஆண்டுகளாக அமலில் இருக்கும் இந்தத் தடை முடிவுக்கு வருகிறது.
அந்த திரைப்படங்களுக்கு உடனடியாக உரிமங்கள் வழங்கத் துவங்கப்போவதாகவும் முதல் திரையரங்கம் மார்ச் 2018-இல் செயல்படத் தொடங்கும் என்றும் கலாசாரம் மற்றும் தகவல் அமைச்சகம் கூறியுள்ளது.
இந்த நடவடிக்கை, இளவரசர் முகம்மது பின் சல்மானின் 2030-ஆம் ஆண்டுக்கான சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்த திட்டத்தின் ஒரு பகுதி ஆகும்.
பழமைவாத இஸ்லாமிய ராஜ்ஜியம், 1970 களில் திரையரங்குகளைக் கொண்டிருந்தது, ஆனால் அவற்றை மூடுமாறு மதகுருக்கள் அதிகாரிகளை வற்புறுத்தி மூடவைத்தனர்.
கடந்த ஜனவரியில், மூத்த மதகுரு ஷேக் அப்துல் அஸீஸ் அல் அல்-ஷேக், திரையரங்குகளை அனுமதித்தால், அவை ஒழுக்கநெறிகளை சீர்குலைக்கும் என்று எச்சரித்திருந்தார்.
சௌதி அரேபியாவின் அரச குடும்பம் மற்றும் மத ஸ்தாபனம் சுன்னி இஸ்லாத்தின் ஒரு கடினமான வடிவமான வஹாபிசத்தையும் இஸ்லாத்தின் கொள்கைகள் மற்றும் உடை கட்டுப்பாட்டையும் தீவிரமாகக் கடைபிடிக்கின்றன.
சினிமாவிற்கு உரிமங்கள் வழங்குவதற்கான முடிவு, சௌதிகளுக்கான வெளிப்படையான மற்றும் வளமான கலாசாரத்தை ஊக்குவிப்பதற்கான மத்திய அரசின் திட்டம் என கலாசார அமைச்சகம் திங்கட்கிழமை அன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது ஒரு திருப்புமுனை என கலாசார அமைச்சர் அவாத் அலாவத் வர்ணித்துள்ளார்.
“திரையரங்குகளைத் திறப்பது பொருளாதார வளர்ச்சிக்கும் விரிவாக்கத்துக்கும் வழிவகுக்கும். விரிவான கலாசார துறையை மேம்படுத்துவதன் மூலம் புதிய வேலை மற்றும் பயிற்சி வாய்ப்புக்களை உருவாக்க வழிவகுக்கும். மேலும், செளதி ராஜியத்தின் கேளிக்கை வாய்ப்புக்களையும் விரிவாக்கச் செய்யும்” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 300 திரையரங்குகளில் 2 ஆயிரம் திரைகளில் திரைப்படங்கள் திரையிட நடவடிக்கை எடுக்கப்படும் என அது தெரிவித்துள்ளது.
அதாவது, 203-ஆண் ஆண்டில், கலாசாரம் மற்றும் கேளிக்கை மீதான மக்களின் செலவினங்கள் 2.9 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக அதிகரிக்க வைக்கும் திட்ட இலக்கை 32 வயது பட்டத்து இளவரசர் நிர்ணயித்திருக்கிறார்.
-BBC_Tamil

























