ஐஜிபி: குற்றச் செயல்களைக் குறைக்க எங்களுக்கு வழி சொல்லுங்கள்

நாட்டில் குற்றச் செயல்களைக் குறைப்பதற்கு புதிய யோசனைகளையும் பரிந்துரைகளையும் போலீஸுக்கு வழங்குமாறு தேசிய போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி)இஸ்மாயில் ஒமார் பொது மக்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

பொது மக்கள் அந்த யோசனைகளை சம்பந்தப்பட்ட மாநில அல்லது மாவட்ட போலீஸ் தலைவர்களுக்கு அல்லது போலீஸ் பொது உறவு அதிகாரிகளுக்கு அனுப்பலாம். பேஸ் புக் என்ற முகநூல் வழியாகவும் தெரிவிக்கலாம் என இஸ்மாயில் சொன்னார்.

“நாங்கள் (போலீஸ்) சிந்தித்திருக்காத சில நடவடிக்கைகளும் இருக்கலாம். சாத்தியமானால் நாங்கள் அவற்றை அமலாக்குவதுடன் சம்பந்தப்பட்ட தனிநபர்களைப் பாராட்டும் வகையில் பரிசுகளையும் கொடுக்கலாம்.”

பெட்டாலிங் ஜெயாவில் உள்ள முத்தியாரா டமன்சாரா கேர்வ் கடைத் தொகுதியில் குற்றத் தடுப்பு விழிப்புணர்வு இயக்கத்தைத் தொடக்கி வைத்த பின்னர் ஐஜிபி நிருபர்களிடம் பேசினார்.

சிலாங்கூர் போலீஸ் தலைமையகமும் மலேசியக் குற்றத் தடுப்பு அறநிறுவனமும், இளைஞர் விளையாட்டு அமைச்சும் கூட்டாக அந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளன.

பொது மக்களுடைய உதவியும் ஆதரவும் இருந்தால் குற்றச்செயல் விகிதத்தை மேலும் குறைக்க முடியும் என இஸ்மாயில் சொன்னார்.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளின் கீழ் போலீஸ் மேற்கொண்ட 26 நடவடிக்கைகள் நல்ல பலனைத் தந்திருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார். குற்றச்செயல்களைக் குறைப்பதற்குத் தாங்கள் எந்த வழிகளில் உதவ முடியும் என பொது மக்கள் இப்போது போலீசைக் கேட்கத் தொடங்கியுள்ளனர்.

“பொதுப் பாதுகாப்புக்காக போலீஸுடன் ஒத்துழைப்பதில் மக்கள் இப்போது அக்கறை காட்டத் தொடங்கியுள்ளதை அது காட்டுகிறது.”

முன்னதாக “போலீஸ் பணிகளுக்கு அப்பால்- வியூக மாற்றம்” என்னும் தலைப்பில் சிலாங்கூர் போலீஸ் படைத் தலைவர் துன் ஹிஸான் துன் ஹம்சா, சுயேச்சை எழுத்தாளர் கூ கென் ஹோர்-ருடன் இணைந்து எழுதிய புத்தகத்தை இஸ்மாயில் வெளியிட்டார்.

குற்றச் செயல்களை ஒடுக்குவதில் சமூகம் எவ்வாறு ஒத்துழைக்க முடியும் என்பது பற்றிய தகவல்கள் அந்தப் புத்தகத்தில் அடங்கியுள்ளன. அந்த 179 பக்க புத்தகத்தின் விலை 25 ரிங்கிட் ஆகும். அனைத்து எம்பிஎச் புத்தகக் கடைகளிலும் அது கிடைக்கும்.

TAGS: