பாலத்தீன நாட்டின் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தலைநகராக ஜெருசலேத்தை அறிவிக்க வேண்டும் என்று முஸ்லிம் நாடுகளின் தலைவர்களை துருக்கி அதிபர் ரசெப் தாயிப் எர்துவான் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்லாமிய ஒத்துழைப்பு நிறுவனத்தின் உச்சி மாநாடு ஒன்றில் உரையாற்றிபோது, இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அறிவித்திருக்கும் அமெரிக்காவின் முடிவு செல்லாது என்று அவர் கூறியுள்ளார்.
இஸ்ரேல் ஒரு ‘பயங்கரவாத நாடாக’ இருப்பதாக எர்துவான் மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், அமைதி வழிமுறையில் பங்காற்றுவதில் இருந்து அமெரிக்கா தன்னைதானே தகுதியிழக்க செய்துள்ளதாக பாலத்தீன் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
“அமைதி வழிமுறையில் அமெரிக்காவின் எந்தப் பங்கையும் தாங்கள் ஏற்றுக்கொள்ள போவதில்லை. அவர்கள் முற்றிலும் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பதை நிரூபித்துள்ளனர்” என்று அவர் இந்த உச்சி மாநாட்டில் தெரிவித்திருக்கிறார்.
ஜெருசலேத்தின் தகுதி நிலை, பாலத்தீனம்-இஸ்ரேல் மோதலின் முக்கிய பகுதியாக உள்ளது.
இந்த நகரில், குறிப்பாக கிழக்கு ஜெருசலேமில்தான், யூத, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதங்களின் முக்கிய புனித இடங்கள் உள்ளன.
ஜோர்டனால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த கிழக்கு ஜெருசலேத்தை 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் இஸ்ரேல் கைப்பற்றியதுடன், ஜெருசலேம் முழுவதையும் தன்னுடைய தலைநகரமாக இஸ்ரேல் கூறி வருகிறது.
எதிர்கால சுதந்திர தனி நாட்டின் தலைநகராக கிழக்கு ஜெருசலேமை பாலத்தீனம் உரிமை கோரி வருகிறது. 1993ம் ஆண்டு இஸ்ரேல்-பாலத்தீன அமைதி உடன்படிக்கையின்படி, தலைநகரின் இறுதி தகுதி நிலை பிந்தைய அமைதி பேச்சுக்களின்போது விவாதிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெருசலேம் முழுவதையும் தன்னுடையதாக கோருகின்ற இஸ்ரேலின் நிலைப்பாடு சர்வதேச அங்கீகாரத்தை இதுவரை பெறவில்லை. இஸ்ரேலின் மிகவும் நெருக்கமாக கூட்டாளியான அமெரிக்கா உள்பட எல்லா நாடுகளும் தங்களின் தூதரகங்களை இஸ்ரேலின் டெல் அவிவில் கொண்டுள்ளன.
அமெரிக்கா படிப்படியாக அதன் தூதரகத்தை ஜெருசலேத்துக்கு மாற்றப்போவதாகவும் அதிபர் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.
‘ராஜீய தீர்வு’
இஸ்லாமிய ஒத்துழைப்பு நிறுவனத்தின் உச்சி மாநாட்டின் தொடக்கத்தில் இது பற்றிய விவாதம் மிகவும் வலுவாக இருந்ததாக இஸ்தான்புல்லில் வாழும் பிபிசி செய்தியாளர் மார்க் லோவன் தெரிவித்திருக்கிறார்.
ஆனால், இந்த நாடுகள் குழுவால் என்ன செய்ய முடியும் என்று அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார். அந்த குழுவிலுள்ள சில நாடுகள் டிரம்புக்கு ஆதரவு அளிப்பவையாக உள்ளன.
மிக குறைவான எதிர்ப்பார்ப்பின் அடையாளமாக பல்வேறு நாடுகள் இந்த உச்சி மாநாட்டிற்கு தங்கள் அமைச்சர்களைத்தான் அனுப்பியுள்ளன என்று பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
ஜெருசலேம் பிரச்சினைக்கு முஸ்லிம் நாடுகளில் நடைபெற்ற எதிர்வினை ஒப்பீட்டளவில் குறைவாகவே இருந்தது.
கடந்த வாரம் டிரம்பின் இந்த அறிவிப்புக்கு பின்னர், இஸ்ரேலோடு இருக்கும் தூதரகத் தொடர்பை துருக்கி துண்டிக்கும் என்று எர்துவான் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், தற்போதைய உரையில் இது பற்றி அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.
ஜெருசலேம் பற்றிய அமெரிக்க அதிபர் டிரம்பின் முடிவுக்கு முஸ்லிம் நாடுகள் ஒன்றாக இணைந்து பதிலளிக்க வேண்டும் என்று எர்துவான் வலியுறுத்தியுள்ளார். -BBC_Tamil