ஆங் சாங் சூச்சி மீது, `இனப்படுகொலை` குற்றச்சாட்டு பாயக்கூடும்?

சையத் ராவுத் அல்-ஹுசைன், ரோஹிஞ்சாக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட குற்றங்களுக்கு காரணமானவர்கள், நீதியின் முன்பு நிறுத்தப்படுவார்கள் என்பதில் திடமாக இருக்கிறார்.

ஐ.நாவின் மனித உரிமை ஆணைச்சின் தலைவர் என்பதால், அவரின் கருத்துக்கள் முக்கியம் வாய்ந்தவை.

இதில், மியான்மரின் மக்கள் தலைவரான ஆங் சாங் சூச்சி மற்றும், ஆயுதப்பிரிவு தலைவரான ஜெனரல் ஆங் மின் ஹிலைங் ஆகியோர், இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை வருங்காலத்தில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை அவர் மறுக்கவில்லை.

மியான்மரில் ரோஹிஞ்சாக்கள் மீது நடந்துள்ள தாக்குதல்கள், மிகவும் பரந்ததாகவும், திட்டமிட்ட செயல்போலவும் உள்ளதால், இனப்படுகொலை என்பதை, இதிலிருந்து நீக்க முடியாது என்று அவர் ஐ.நாவின் மனித உரிமைகள் குழுவில் கூறினார்.

“நடந்துள்ள ராணுவ செயல்பாடுகளைப் பார்க்கும்போது, இந்த முடிவுகள் மேல்மட்டத்தில் எடுக்கப்பட்டது, என்பதுபோல தெரிகிறது” என்று ஐ.நாவின் உயர் ஆணையர், பிபிசி பனோரமாவிற்கு தெரிவித்தார்.

யூதப் படுகொலை சம்பவத்துக்குப் பிறகு விளக்கப்பட்ட வார்த்தையே இனப்படுகொலை. புதிதாக உருவாக்கப்பட்ட ஐ.நாவின் உறுப்பினர் நாடுகள் இணைந்து ஒரு கூட்டறிக்கையில் கையெழுத்திட்டனர். அதில், இனப்படுகொலை என்பது, ஒரு குறிப்பிட்ட குழுவை அழிப்பதற்கான திட்டமிடப்பட்ட செயல்பாடுகள் என்ற விளக்கம் பயன்படுத்தப்பட்டது.

அங்கு, இனப்படுகொலை நடந்துள்ளது என்பதை நிரூபிக்கும் வேலை, அல்-ஹூசைனுக்கு கிடையாது. அதை நீதிமன்றத்தால்தான் செய்ய முடியும்.

ஆனால், மியான்மரின் ரக்கைன் மாநிலத்தில் வாழ்ந்த இஸ்லாமிய குழுவினர் மீது நடத்தப்பட்ட, ‘அதிர்ச்சிகரமான கொடூர தாக்குதல்கள்` குறித்த சர்வதேச குற்றவியல் விசாரணைக்காக அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆனால், உயர் ஆணையர், இதை சரியானது என்று நிரூபிப்பது சற்று கடினம் என்கிறார். “நீங்கள் ஓர் இனப்படுகொலைக்கு திட்டமிடுகிறீர்கள் என்றால், நீங்கள் அதை ஆவணப்படுத்த மாட்டீர்கள், அதற்கான கட்டளைகளை அளிக்க மாட்டீர்கள்” என்று அவர் கூறுகிறார்.

“ஆதாரங்களுக்கான வரம்பு என்பது மிகவும் பெரியது. ஆனால், தற்போது நாம் பார்க்கும் விஷயங்களிலிருந்து இவற்றை நீதிமன்றம் கண்டுபிடித்தால் அது என்னை ஆச்சரியப்படுத்தாது” என்கிறார்.

டிசம்பரின் தொடக்கத்தில், ராணுவத்தின் தாக்குதலை தொடர்ந்து, 6.5 லட்சம் மக்கள் மியான்மரிலிருந்து வெளியேறினர். நூற்றுக்கணக்கான வீடுகள் தீக்கிறையாக்கப்பட்டன.

அத்துமீறல்கள் நடந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. கொலை, வன்புணர்வு என பல விஷயங்களை அங்கு பிரச்சனை தொடங்கியபோது, நானே, அந்த முகாம்களில் கேட்டிருக்கிறேன்.

இந்த தாக்குதல்கள் தொடங்குவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பாகவே, ஐ.நாவின் மனித உரிமைகள் தலைவர், மியான்மரின் தலைவரான சூச்சியிடம், ரோஹிஞ்சாக்களை பாதுகாக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

2016 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில் தொடங்கிய அத்துமீறல்கள் குறித்து, அவரின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், அவர் சூச்சியிடம் தொலைபேசி மூலமாக பேசியது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

“ராணுவ செயல்பாடுகளை நிறுத்துமாறு அவரிடம் நான் வலியுறுத்தினேன். அவரால் முடிந்த எல்லாவற்றையும் செய்து இதை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டேன், ஆனால் அவ்வாறு நடந்ததாக தெரியவில்லை” என்று அவர் கூறுகிறார்.

ராணுவத்தின்மீது, சூச்சிக்கு உள்ள அதிகாரத்தில் ஓர் எல்லை உள்ளது. ஆனால், அவர் இன்னும் முயன்றிருந்தால், ராணுவத்தின் செயல்பாடுகளை தடுத்திருக்கலாம் என்று அல்-ஹூசைன் நம்புகிறார்.

சூச்சி ரொஹிஞ்சா என்ற வார்த்தையை பயன்படுத்தாதது குறித்து அவர் விமர்சிக்கிறார். “அவர்களின் பெயரையே, பிரித்து எடுப்பது என்பது, ஒருகட்டத்தில் மனிதத்தன்மையற்றதாகிறது, அங்கு எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்று நம்பவைக்கிறது” என்கிறார்.

இது ஒரு ஐ.நா உயரதிகாரியின் மிகவும் சக்தியாய்ந்த வார்த்தைகளாகும்.

“இது மிகவும் தெளிவாக திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதையே நம்மால் உணர முடிகிறது.”

ராணுவ பாதுகாப்பு சாவடிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்தாக்குதலே இவை என்று, மியான்மர் அரசு கூறுகிறது.

ஆனால், பிபிசி பனோரமா, ரொஹிஞ்சாக்கள் மீதான தாக்குதல் என்பது முன்பே திட்டமிடப்பட்டு, தயார் செய்து நடத்தபட்ட ஒன்று என்பதை காண்பிக்கும் ஆதாரங்களை சேகரித்துள்ளது.

மியான்மரில், உள்ளூர் பௌத்தர்களுக்கு பயிற்சிகளும், ஆயுதங்களும் அளிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடப்பதற்கு ஒரு வாரகாலத்திற்கு முன்னர், அரசு ஒரு சலுகையை வெளியிட்டது.

“ரக்கைன் மாநிலத்தை பாதுகாக்க விரும்பும் ஒவ்வொரு குடிமகனுக்கும், மியான்மரின் காவல்துறையில் இடமுள்ளது என்ற அறிவிப்பை அளித்தது.

“இந்த நடவடிக்கை, பொதுமக்கள் மீது கொடூர குற்றங்கள் நடத்துவதற்காக மிகவும் திறமையாக எடுக்கப்பட்ட முடிவு” என்று கூறுகிறார், ஃபோர்ட்டிஃபை ரைட்ஸ் என்ற மனித உரிமைகள் அமைப்பின் தலைமை நிர்வாகி மாத்யூ ஸ்மித்.

தங்களின் வீடுகளும், அக்கம்பக்கத்தினரும் தாக்கப்பட்டதை நேரில் பார்த்த பலரின் கருத்தும் பரவலாக இவ்வாறே உள்ளது.

முகமது ரஃபீக் என்பவர், “அவர்கள் ராணுவம்போல இருந்தார்கள்.” என்கிறார். “அவர்கள் ஒரேமாதிரியான ஆயுதத்தை வைத்திருந்தார்கள். அவர்கள் உள்ளூர் இளைஞர்கள், எங்களுக்கு அவர்களை தெரியும். ராணுவம் எங்களை சித்ரவதை செய்து, வீடுகளை எரித்தபோது, அவர்கள் அங்கு இருந்தார்கள்.”

அதேவேளையில், ரோஹிஞ்சாக்கள் வேறுசில வழிகளிலும் பலவீனமாகி வருகிறார்கள்.

கோடைகாலத்தில் உணவுப்பற்றாக்குறை வடக்கு ரக்கைன் மாநிலத்தில் நிலவியது. அரசு மக்களின் நிலையை இன்னும் இறுக்கமாக்கியது. ஆகஸ்டின் மத்தியில், அதிகாரிகள், நேரடியாக இல்லாமல், மறைமுகமான வகையில் வடக்கு ரக்கைன் பகுதிக்கான உணவு உள்ளிட்ட தேவைகளை தடை செய்தனர்.

தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக, ராணுவம் அந்தப் பகுதிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, மியான்மர் அதிகாரிகள் கட்டுப்பாட்டை கொண்டுவரவேண்டும் என, மியான்மருக்கான ஐ.நாவின் பிரதிநிதி அப்போதே பொது எச்சரிக்கையை வெளியிட்டார்.

ஆனால், ரோஹிஞ்சா கிளர்ச்சியாளர்களால், முப்பது காவல்துறை மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது, அதற்கான ராணுவத்தின் பதிலடி என்பது மிகவும் பெரியதாகவும், திட்டமிடப்பட்டும், பெரிய அழிவை உருவாக்கும் வகையிலும் அமைந்தது.

மியான்மரின் தலைவர் ஆங் சாங் சூச்சி மற்றும், அந்நாட்டு ஆயுதப்படை தலைவர் ஆகிய இருவரிடமும் இதுகுறித்து பிபிசி கருத்து கேட்டது. ஆனால், இருவருமே பதிலளிக்கவில்லை.

கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இன்னும் இது முடியவில்லை என்றே எண்ணுவதாக அல்-ஹூசைன் கூறுகிறார். “இது மிகவும் மோசமான செயல்களின் தொடக்க நிலையாகவும் இருக்கலாம்” என்கிறார்.

வங்கத்தில் உள்ள முகாம்களில் ஜிகாதி குழுக்கள் உருவாகி, அவர்கள் பதில் தாக்குதல் நடத்தலாம். அவ்வாறு நடந்தால், அது பௌத்தர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு இடையேயான ஒப்புதல் வாக்குமூலம் போல ஆகிவிடும் என்று அவர் கூறுகிறார்.

இந்த எண்ணம் மிகவும் அச்சமான ஒன்று என கூறும் உயர் ஆணையர், மியான்மர் இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துகொள்ளவில்லை என்பதை மட்டும் நம்புவதாக கூறினார்.

“இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை என்பது மிகவும் பெரியது. ஆனால், சர்வதேச அளவில் எழுந்துள்ள கவலைகளுக்கு, மிகவும் இலகுவாக மியான்மர் தங்களின் பதில்களை அளிப்பதுதான் சற்று அச்சமளிப்பதாக உள்ளது” என்கிறார் அவர். -BBC_Tamil