சவுதி அரேபியாவில் நடைபெறவுள்ள சதுரங்கப் போட்டியில் கலந்துகொள்வதற்குப் பதில், தனது 2 விருதுகளையும் இழக்க, உலகப் பெண்கள் சதுரங்க சாம்பியன் தயாராக உள்ளார் என ஸ்தெப்ஃபீட் (StepFeed) போர்டல் அறிக்கை வெளியிட்டுள்ளது.
உக்ரைனைச் சேர்ந்த சதுரங்கச் சாம்பியன், அன்னா முஷிசுக், 27, கடந்த ஆண்டு காட்டார், டோஹாவில் சதுரங்கப் போட்டியில் 2 விருதுகளை வென்றார்.
இருப்பினும், இந்த ஆண்டு, அன்னா சவுதி அரேபியாவில் நடைபெறவுள்ள உலகச் சதுரங்க கூட்டமைப்பு (FIDE) ஏற்பாடு செய்துள்ள சதுரங்கப் போட்டியில் கலந்துகொள்ள மறுத்துவிட்டார்.
அன்னாவின் கூற்றுப்படி,பெண்களை ‘முக்கியமற்ற ஓர் உயிரினம்’ போல நடத்தும் சவுதி அரேபியாவின் செய்கையை அவர் கண்டிக்கிறார், என்று தி கார்டியன் அறிக்கையை மேற்கோளிட்டு ஸ்தெப்ஃபீட் கூறியுள்ளது.
“இன்னும் ஒரு சில நாட்களில், நான் 2 உலக சாம்பியன் விருதுகளை இழக்கவுள்ளேன், காரணம் நான் சவுதி அரேபியாவிற்குச் செல்ல விரும்பவில்லை,” என்றார் அவர்.
கடந்த ஆண்டு வென்ற 2 விருதுகளும், தன்னை மகிழ்ச்சியில் ஆழ்த்திய முக்கியத் தருணம் என்று அவர் கூறினார். ஆனால், பல போட்டிகளில் சம்பாதித்ததைவிட பல மடங்கு வெகுமதி கொடுக்கப்போகும் சவூதி போட்டியில், தான் கலந்துகொள்ளப் போவதில்லை என்பதில் அவர் மிகவும் உறுதியாக இருக்கிறார்.
“மற்றவர்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டு விளையாட நான் விரும்பவில்லை, அதோடு, என்னை நான் மிகவும் முக்கியமானவளாகக் கருதுகிறேன்,” என்றார் அன்னா.
தி இண்டிபேண்டன் போர்ட்டலின் செய்திபடி, சவுதி அரேபியா “கிங் சோலமான் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2017” என்ற போட்டியை நடத்துவதற்கு $ 1.5 மில்லியன் அமெரிக்க டாலரை செலவளித்து, வெற்றியாளர்களுக்கு $ 2 மில்லியன் பரிசு வழங்கவுள்ளதாக கூறியுள்ளது.
இதற்கிடையே, பெண் விளையாட்டாளர்கள் கருநீல அல்லது கருப்பு நிற பேண்ட்ஸ் மற்றும் உயர்கழுத்து சட்டை அணிந்தால் போதும்; பர்தா அல்லது அபாயா அணிய தேவையில்லை என்று, கடந்த நவம்பரில் ஏற்பாட்டாளர்களின் ஒப்புதல் பெற்றுவிட்டதாக, உலகச் சதுரங்க கூட்டமைப்பு அறிவித்தது.
சமீப காலமாக, சவூதி அரேபியா பெண்கள் உரிமைகளை மீட்டெடுக்கும் வகையில் சில முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, உதாரணத்திற்கு உள்ளூர் தேர்தல்களில் பெண்கள் போட்டியிட அனுமதித்தல் மற்றும் கார் ஓட்ட அனுமதித்தல் போன்றவை.