சௌதி அரேபியா: ஒருபாலின திருமணத்தில் கலந்துகொண்டவர்கள் கைது

ஒருபால் உறவு திருமணத்தின்போது எடுக்கப்பட்ட காணொளி என்று கூறப்படும் காணொளி ஒன்றில் தோன்றிய பல இளைஞர்களை கைது செய்துள்ளதாக சௌதி அரேபிய காவல்துறையினர் கூறியுள்ளனர்.

திறந்த வெளியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பதிவு செய்யப்பட்ட அந்தக் காணொளியில், ஒரு கம்பளத்தில் மீது இரண்டு ஆண்கள் ஒன்றாக நடந்து வருவதையும், அவர்கள் மீது வண்ணக் காகிதங்கள் தூவப்படுவதையும் காண முடிகிறது.

அந்த இரண்டு ஆண்களில் ஒருவர் மணப்பெண்களுக்கான ஆடையை அணிந்திருப்பதுபோல தோன்றுகிறது.

பாலின மாற்று அறுவைசிகிச்சை செய்து கொள்ளாமலே எதிர்பாலினத்தவரின் ஆடைகளை அணிந்து கொள்ளும் வழக்கம் உடைய ‘கிராஸ் டிரெஸ்ஸர்’ ஒருவரையும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறரையும் அடையாளம் கண்டுள்ளதாக, கடந்த திங்களன்று மெக்கா காவல்துறையினர் கூறியுள்ளனர்.

மெக்காவில் உள்ள ஒரு கேளிக்கை பூங்காவில், கடந்த வெள்ளியன்று, ஒரு திருவிழாவின்போது, இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், அது அங்கிருந்தவர்களுக்கு வியப்பளித்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவரும் அவர்கள் மீது என்ன குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என்று காவல் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

பாலின அடையாளங்கள் அல்லது பாலின சார்பு ஆகியவை தொடர்பாக சௌதி அரேபியாவில் பிரத்யேக சட்டங்கள் எதுவும் இல்லையெனினும், திருமண உறவுக்கு வெளியில் கொள்ளும் தொடர்புகள், ஒருபாலுறவு மற்றும் தவறான நடத்தைகள் என்று கருதப்படும் பிற செயல்களுக்கு இஸ்லாமிய சட்டங்களின் கோட்பாடுகளை பின்பற்றி நீதிபதிகள் தீர்ப்பு வழங்குவதாக மனித உரிமைகள் அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறுகிறது.

பொது ஒழுங்கு, பொது அமைதி, மத விழுமியங்கள், அந்தரங்க உரிமை ஆகியவற்றுக்கு ஊறு விளைவிக்கும் இணையதள நடவடிக்கைகளை அந்நாட்டின் இணையதள குற்றங்களுக்கு எதிரான சட்டம், குற்றமாகக் கருதுகிறது.

பிப்ரவரி 2017-இல், சில திருநங்கைகள் உள்பட 35 பாகிஸ்தான் நாட்டவர்களை சௌதி காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான மீனோ பாஜி என்பவர் காவலில் இருக்கும்போது மரணமடைந்தார்.

அவரது உடலில் துன்புறுத்தப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தாலும், அவர் மாரடைப்பால் மரணமடைந்ததாக சௌதி காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

-BBC_Tamil